புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்...? இது ஏன் அவசியம்...? Explained
புயலுக்கு ஏன் பெயர் சூட்டுகிறார்கள்...? புயலுக்கு எப்படி பெயரை தேர்வு செய்கிறார்கள்...? உள்ளிட்ட விவரங்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.
தற்போது திரும்பும் பக்கமெல்லாம் அர்னாப் புயல் குறித்துதான் பேச்சு. தமிழ்நாட்டுக்கு அர்னாப் புயலால் கனமழை சார்ந்த பாதிப்புகள் ஏதும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், புயல் குறித்த அப்டேட்டை தமிழக மக்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
அர்னாப் புயல் வரும் முன்னரே அதன் பெயரை ஒட்டி பெரும் குழப்பமே வெடித்தது. ஒரு சிலர் இந்த புயலை 'முரசு' என பெயரிட்டு அழைத்து வந்தனர். ஆனால், வெகுசிலர் மட்டுமே அர்னாப் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.
இந்த பெயர் சர்ச்சை ஒருபுறம் இருக்க, புயலுக்கு ஏன் பெயர் சூட்டுகிறார்கள்...? புயலுக்கு எப்படி பெயரை தேர்வு செய்கிறார்கள்...? உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்வது நலம். ஒவ்வொரு புயல் சீசனிலும் இந்த சந்தேகம் பலருக்கும் வரும். அந்த சந்தேகத்தை இதை முழுமையாக வாசித்து தீர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | அடுத்த 48 மணி நேரத்தில்.. தமிழகத்தை நோக்கி தாழ்வு பகுதி! டெல்டா வெதர்மேன் எச்சரிக்கை
புயல்களுக்குப் பெயரிடுவது ஏன் அவசியம்?
- புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்குவதற்கு முன்னர், புயல் உருவாகும் அட்சரேகை, தீர்க்கரேகை எண்களைக் கொண்டே வானிலை மையங்கள் அழற்றை அடையாளப்படுத்தி வந்தன.
- எண்களை விட மனிதர்களின் பெயர்களையோ அல்லது எளிமையான வார்த்தைகளையோ நினைவில் வைத்திருப்பது எளிது.
- ஒரே கடற்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு மூன்று புயல்கள் உருவாகும் போது, வானிலை ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே குழப்பம் ஏற்பாடமல் தகவல்களைப் பகிரப் பெயர்கள் உதவுகின்றன.
- பொதுமக்கள், கடலோர மக்கள் மற்றும் மீனவர்களுக்கு விரைவாகப் புயல் எச்சரிக்கையைக் கொண்டு சேர்க்கவும், பேரிடர் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் இது பேருதவியாக இருக்கிறது.
வங்கக் கடல் புயல்களுக்கு பெயரிடுவது யார்?
- வங்கக் கடல், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் நடைமுறை 2004ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
- உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் உறுப்பு நாடுகள் இணைந்து இந்த பெயர்களைத் தேர்வு செய்கின்றன.
- ஆரம்ப கட்டத்தில் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதன்பின் ஈரான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் என 5 நாடுகல் 2018ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டன.
- தற்போது மொத்தம் உள்ள 13 உறுப்பு நாடுகள் இணைந்து இந்த புயல்களுக்கான பெயர்களைத் தீர்மானிக்கின்றன.
மேலும் படிக்க | அர்னாப் புயல் எப்போது, எங்கு கரையை கடக்கும்? தமிழ்நாட்டில் என்ன தாக்கம் இருக்கும்?
பெயர்கள் எப்படி பட்டியலிடப்படுகின்றன?
- ஒவ்வொரு உறுப்பு நாடும் தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கும். அதன்படி, 13 நாடுகள் சேர்ந்து மொத்தம் 169 பெயர்கள் கொண்டு விரிவான பட்டியல் ஒன்றை உருவாக்கி உள்ளன. இதன் சமீபத்திய பட்டியல் 2020ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
- ஆங்கில அகரவரிசைப்படி நாடுகளின் பெயர்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன, அவை: Bangladesh, India, Iran, Maldives, Myanmar, Oman, Pakistan, Saudi Arabia, Sri Lanka, Thailand, UAE, Yemen
- வங்கக் கடலிலோ அல்லது அரபிக் கடலிலோ காற்றின் வேகம் மணிக்கு 62 கி.மீ., அல்லது அதற்கு மேல் அதிகரித்து அதிகாரப்பூர்வமாகப் புயலாக மாறும்போது, இந்த பட்டியலின் வரிசைப்படி அதற்கு பெயர் சூட்டப்படும்.
- உதாரணமாக, வங்கதேசம் பெயர் சூட்டிய பின்னர் அடுத்து இந்தியா அளித்த பெயர் பயன்படுத்தப்படும். அதன் பிறகு, ஈரான் பரிந்துரைத்த பெயர் வரும். 13 நாடுகளும் சுழற்சி முறையில் தலா ஒரு பெயரைப் பயன்படுத்திய பின்னர், அடுத்து மீண்டும் வங்கதேசத்தின் பெயரில் இருந்து ஆரம்பிக்கப்படும்.
பெயரிடுவதின் முக்கிய சர்வதேச விதிகள்
- புயல்களுக்கு நாடுகள் ஏதோ ஒரு பெயரை தங்களின் விருப்பப்படி வைத்துக்கொள்ள முடியாது. WMO வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு உட்பட்ட பெயர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- புயலுக்கு சூட்டப்படும் பெயர் எந்தவொரு அரசியல் இயக்கம், சாதி, மதம் அல்லது கலாச்சார உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.
- உலகளவில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவின் உணர்வுகளையும் சீண்டாத பொதுவான வார்த்தையாக இருக்க வேண்டும்.
- பெயர் உச்சரிப்பதற்கு மிகவும் அதிகபட்சமாக 8 எழுத்துகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
- ஒரு முறை பயன்படுத்தப்பட்ட புயலின் பெயர் மீண்டும் எப்போதுமே பயன்படுத்தப்படாது. ஒரு பெயர் சூட்டப்பட்டுவிட்டால், அது நிரந்தரமாக பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
இந்தியா சூட்டிய முக்கிய பெயர்கள்
- இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பெயர்களில் அக்னி, ஜல், லெஹர், மேக், வாயு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
- மேலும் 2020ஆம் ஆண்டு இந்தியா சமர்பித்த பட்டியலில் 'கதி' (Gati), 'தேஜ்' (Tej), 'முரசு' (Murasu), 'ஆக்' (Aag), 'வியோம்' (Vyom), 'ஜர்' (Jhar), 'பிரபஞ்சன்' (Prabhanjan) உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், இந்த 13 நாடுகளின் கலாச்சாரம், மொழி, பொதுவான அர்த்தங்களைத் தாங்கி நிற்கும் இந்த புயல்களின் பெயர்கள், புயல்களின் தீவிரத்தை மக்களிடம் எச்சரிக்கையாக கொண்டு சேர்க்கும் சர்வதேச குறியீடாக செயல்படுவது கவனிக்கத்தக்கது.