IDBI Bank: விற்பனைக்கு முன் ரூ.2,122 கோடி சொத்து மதிப்பு குறைப்பு.. என்ன நடந்தது?
IDBI வங்கி விற்பனைக்கு மத்தியில் இரண்டு சொத்துகளின் மதிப்பு ரூ.2,122 கோடி குறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
IDBI வங்கியின் இரண்டு முக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.2,122 கோடி குறைக்கப்பட்டுள்ளதாக 2025-26 நிதியாண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த வங்கியை கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த மதிப்பு குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிசினஸ்வேர்ல்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வங்கியின் ஆண்டு அறிக்கையில் இரண்டு அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2,122 கோடி குறைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சொத்துகள் எவை, அவற்றின் மதிப்பு குறைக்கப்பட்டதற்கான சட்டரீதியான காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2025 மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுமதிப்பீட்டில், வங்கியின் சொத்துகளின் மதிப்பு ஏற்கெனவே இருந்த கணக்கீட்டை விட ரூ.2,855 கோடி அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது. ஆனால், 2026 மார்ச் மாதத்திற்குள் வங்கியின் நிலம் மற்றும் கட்டிடங்களின் மதிப்பு ரூ.11,383 கோடியிலிருந்து ரூ.8,881 கோடியாக சரிந்துள்ளது. இந்த மதிப்பு குறைப்புக்கு ஹைதராபாத்தில் உள்ள 50 ஏக்கர் பயிற்சி மைய வளாகமும், மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் அருகே உள்ள ரெய்டர்க் பகுதியில் 5.38 ஏக்கர் நிலம் ஏக்கருக்கு ரூ.269 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதன் அடிப்படையில் IDBI வங்கியின் பயிற்சி மைய நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.13,450 கோடியாக இருக்கலாம் என சிலர் கணக்கிட்டுள்ளனர். ஆனால், இரு நிலங்களுக்கும் வெவ்வேறு சட்டக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இதை நேரடி ஒப்பீடாக கருத முடியாது.
முன்னதாக, IDBI வங்கியின் ஒரு பங்கை ரூ.81 என்ற விலையில் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சொத்துகளின் மதிப்பீட்டிற்கு இரண்டு சுயாதீன மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், ரூ.2,122 கோடி மதிப்புக் குறைப்புக்கான காரணங்கள், சொத்துகளின் விவரங்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்படாதது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.