உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜூபிலன்ட் இங்கிரேவியா (Jubilant Ingrevia) ரசாயன தொழிற்சாலையால் சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, துர்நாற்றம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடு காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜீ மீடியா (Zee Media) விசாரித்த நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஜ்ராலாவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தாங்கள் இழந்த உறவினர்களின் புகைப்படங்களை காண்பித்து வேதனை தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை பயன்படுத்தியதால் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் தனது குடும்பத்தில் மூன்று தம்பிகள், ஒரு தம்பியின் மருமகள், ஒரு மருமகன், ஒரு மகள் மற்றும் பெற்றோர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் புற்றுநோய் மற்றும் காசநோய் பாதிப்புகளும் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
மற்றொரு குடும்பத்தினரும் மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தியதால் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும், தற்போது குடும்பத்தில் அனைவரும் ஏதோ ஒரு உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜூபிலன்ட் இங்கிரேவியா தொழிற்சாலையை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக நாய்புரா, சவாஜ்பூர் டோர், சடேலாபூர், பசேலி, டிகாரியா உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதிகளில் உள்ள கைப்பம்புகளில் இருந்து மஞ்சள் நிறத்திலும், அழுக்காகவும் தண்ணீர் வெளியேறுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை பருகிய பலருக்கும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஒருவர், தங்களுக்கு கிடைக்கும் குடிநீர் முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும், அதனை பருகிய பிறகு உடலில் அசௌகரியம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், வேறு குடிநீர் வசதி இல்லாததால் அதே தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தண்ணீரில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால்தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மற்ற பெண்களும் புற்றுநோய், சிறுநீரக கற்கள், வயிற்றுவலி மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களிடம் புற்றுநோய், சுவாசக் கோளாறு, காசநோய், கண் பாதிப்பு மற்றும் தோல் நோய்கள் அதிகம் காணப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு இரண்டு வீடுகளுக்கு இடையிலும் ஏதேனும் ஒரு குடும்பத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த மருத்துவர் டாக்டர் டி.எஸ். ஹர்ஷ், நுரையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் கண் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜூபிலன்ட் இங்கிரேவியா தொழிற்சாலையில் ரசாயன பொருட்கள் மற்றும் ரசாயன இடைநிலை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளில் ரசாயனப் பொருட்களைக் கையாளுதல், உற்பத்தி செய்தல் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளுக்கு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் வாயுக்கள், துர்நாற்றம் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து பல ஆண்டுகளாகப் புகார் அளித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜீ மீடியா செய்தியாளர், அப்பகுதியில் உள்ள பல்வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளார். இந்த மாதிரிகள் ஆய்வுக்காக ஐடிஎஸ் (ITS) ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் மூலம் தண்ணீரில் ரசாயனக் கழிவுகள் கலந்துள்ளதா, அதன் தரம் குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வக முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.