Commercial LPG Price Hike : இன்று அக்டோபர் 1ஆம் தேதியாகும். ஒவ்வொரு ஆங்கில மாதம் 1ஆம் தேதி அன்றும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் கொண்டுவரும்.
அந்த வகையில், 19 கிலோ வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி உள்ளன. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்துள்ளது. இதன்மூலம், வணிக எல்பிஜி சிலிண்டரின் ரூ.2,983 விலையில் விற்பனையாகி வருகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியை பொருத்தவரை வர்த்தக சிலிண்டரின் விலை 62.50 ரூபாய் அதிகரித்துள்ளது, 2,810 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9.50 ரூபாய் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விலை சற்று குறைந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக விலை உயர்ந்து வருகிறது. இந்த மாத இறுதியில் நவராத்திரி பண்டிகை வர இருக்கிறது. அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது.
பண்டிகை காலங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு வழங்கும் வணிக நிறுவனங்களில் வர்த்தக சிலிண்டர்களுக்கான தேவை வழக்கமாக அதிகரிக்கும் காலகட்டாகும். வீட்டு உபோயக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஹோட்டல்கள், உணவகங்கள், சிறிய சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு வழங்கும் வணிக நிறுவனங்கள் தங்களின் அன்றாட சமையல் தேவைகளுக்காக வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றன. இந்த உயர்ந்த சிலிண்டர் விலை இவற்றின் ஒட்டுமொத்த இயக்கச் செலவுகளை அதிகரிக்கக் கூடும். குறிப்பாக, பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த அதிகரிப்பு ஏற்படலாம்.
குறைந்த லாப வரம்புகளில் இயங்கும் சிறு வணிகங்கள், இந்த உயர்ந்த எல்பிஜி விலையின் தாக்கத்தை நேரடியாக உணரக்கூடும். வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலைகளின் இந்த உயர்வு, உணவு மற்றும் டீ, காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றின் விலையிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.