Changes from November 1: இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தை போலவே நவம்பர் மாதத்திலும், சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், பல வித நிதி மாற்றகங்கள் நிழவும். குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கான 'வாழ்நாள் சான்றிதழ்' (ஜீவன் பிரமாண பத்ரா) சமர்ப்பித்தல், வரி தணிக்கைக்கு (Tax Audit) உட்பட்ட வணிகங்களுக்கான வருமான வரி தாக்கல் (ITR) காலக்கெடு, சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையில் மாற்றங்கள் போன்றவை நவம்பர் மாத முக்கிய மாற்றங்களில் அடங்கும்.
இவை தவிர, நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள், வங்கிகளின் வட்டி விகிதங்களைக் கவனிப்பதும் அவசியம். இந்த மாற்றங்கள் ஓய்வூதியதாரர்கள், வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டுகளையும் பாதிக்கலாம். நவம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய விதிகள் பற்றி இங்கே காணலாம்.
அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நவம்பர் மாதம் மிக முக்கியமான காலமாகும். ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் பிரமாண் பத்ரா எனப்படும் 'வாழ்நாள் சான்றிதழை' (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். இது, ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருப்பதையும், தொடர்ந்து ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் என்பதையும் உறுதிப்படுத்தும் ஆவணமாகும்.
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் பணி அக்டோபர் 1, 2026 அன்றே தொடங்கிவிட்டது. மற்ற தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் இந்தச் செயல்முறையை மேற்கொள்ளலாம். இதற்கான கடைசித் தேதி நவம்பர் 30, 2026 ஆகும்.
வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கும் நவம்பர் மாதம் ஒரு முக்கியமான காலமாகும். 2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்குகளைத் தணிக்கை (Tax Audit) செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31-லிருந்து நவம்பர் 21, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி வரி தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய வணிகங்கள், நிறுவனங்கள், தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களுக்கு (LLP) இந்த நீட்டிப்பு பொருந்தும். இருப்பினும், இந்தக் காலக்கெடு அனைத்து வரி செலுத்துவோருக்கும் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்றும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை மறுஆய்வு செய்கின்றன. எனவே, நவம்பர் 1 அன்று வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படலாம். பல மாதங்களாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், பண்டிகை காலத்தை ஒட்டி, அரசு இந்த மாதம் இதன் விலைகளை குறைக்கக்குடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான வைப்புத்தொகைகளில் (FD) முதலீடு செய்பவர்கள், நவம்பர் மாதம் முழுவதும் வங்கிகளின் வட்டி விகிதங்களைக் கவனித்து வருவது அவசியமாகும். வங்கிகள் தங்கள் தேவைக்கேற்பவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவும் பல்வேறு கால அளவுகளுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்களை மாற்றியமைக்கக்கூடும்.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பில் சீர்திருத்தங்களின் முதல் கட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) அக்டோபர் 26 அன்று வெளியிட்ட அறிவிக்கைகளின்படி, விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடிகள், பணத்தைத் திரும்பப் பெறும் (refund) நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட புதிய விதிகள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.