Changes from October 1: இன்று அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் நிதி மற்றும் வங்கிச் சேவை சார்ந்த பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இவை வரி செலுத்துவோர், ஓய்வூதியதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோர் என நாடு முழுவதும் உள்ள நுகர்வோரைப் பாதிக்கக்கூடும்.
மொத்த நிலையான வைப்புத்தொகை (Bulk FD) விதிகள், ₹2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் மீதான MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) அமலாக்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கை முடிவு ஆகியவை இந்த மாத மாற்றங்களில் முக்கியமானவையாகும். மேலும், செப்டம்பர் மாதத்தில் முடிவடையவிருந்த வரி தணிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு உள்ளிட்ட முக்கியமான வரி தொடர்பான காலக்கெடுக்களும் இதில் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் பொதுமக்களின் நிதிநிலை மற்றும் அன்றாடப் பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், அவற்றைத் தெரிந்து வைத்திருப்பது தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்கவும், காலக்கெடுவைக் கடைப்பிடிக்கவும், சரியான நிதி முடிவுகளை எடுக்கவும் உதவும்.
அக்டோபர் மாதம் அனைவரும் கவனிக்க வேண்டிய 5 முக்கிய நிதி சார்ந்த மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்:
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு தனது அடுத்த கூட்டத்தை அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7, 2026 வரை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் மாற்றப்படுகிறதா அல்லது அப்படியே தொடர்கிறதா என்பததை பொறுத்து கார் கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
ஆகஸ்ட் மாதக் கொள்கை மறுஆய்வுக்குப் பிறகு, தொடர்ந்து நான்கு கூட்டங்களாக ரெப்போ விகிதம் 5.25% என்ற அளவிலேயே மாற்றப்படாமல் நீடித்து வருகிறது.
மொத்த நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இவை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
புதிய விதிமுறைகளின்படி, வங்கிகள் தங்கள் இணையதளங்களில் அனைத்து வேலை நாட்களிலும் மொத்த நிலையான வைப்புத்தொகைகளுக்கான (₹3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்டவை) வட்டி விகிதங்களை வெளியிட வேண்டும்.
இந்த விகிதங்கள் காலை 10 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும். தகவல்களைப் புதுப்பிக்க 10 நிமிட அவகாசமும் வழங்கப்படும். மேலும், தகுதியுள்ள மொத்த வைப்புத்தொகைகளுக்கு, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட விகிதத்திலேயே வங்கிகள் வட்டி வழங்க வேண்டும்.
தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) சந்தாதாரர்களுக்கு, 2026 அக்டோபர் 1 முதல் திருத்தப்பட்ட 'பாயிண்ட் ஆஃப் பிரசன்ஸ்' (PoP) கட்டண முறை அமலுக்கு வரும். PoP மூலம் திறக்கப்படும் ஒவ்வொரு நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணுக்கும் (PRAN) ₹200 என்ற ஒருமுறை பதிவுக்கட்டணத்தை PFRDA நிர்ணயித்துள்ளது.
கணக்கு 'செயலற்றது' (dormant) என வகைப்படுத்தப்பட்டிருந்தால் தவிர, சந்தாதாரர்கள் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பில் (AUM) 0.20% என்ற வருடாந்திரக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.
சில நாட்களுக்கு முன், குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தக்கூடிய வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) நிதியமைச்சகம் அறிவித்தது. இது அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும்.
புதிய விதிமுறைகளின்படி, ₹2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட நபர்-வணிகர் (person-to-merchant) இடையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். ₹75,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ₹300 ஆக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வணிகர்களுக்கான இந்தக் கட்டணங்களை நுகர்வோர் ஏற்க வேண்டியதில்லை என்று அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், வணிகர்கள் இந்தக் கட்டணச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வரி தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-லிருந்து அக்டோபர் 21, 2026 ஆக நீட்டித்துள்ளது.
வரி நிபுணர்கள் குறுகிய கால அவகாசத்திற்குள் விதிமுறை இணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல், வரி தாக்கல் செய்யும் மென்பொருட்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மாற்றங்கள், இணையதளச் சிக்கல்கள் மற்றும் UDIN உருவாக்குவதில் ஏற்பட்ட சிரமங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.