மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் குர்லா பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்கா ஒன்றில் இளம் ஜோடியை 8-10 சிறார்கள் கொண்ட கும்பல் மரக்கட்டைகளை கொண்டு தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த தாக்குதல் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. குர்லா மேற்கு பகுதியில் உள்ள பீனிக்ஸ் மாலின் பின்புறம் உள்ள பிரமோத் மகாஜன் கார்டனில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாஜக தலைவர் கிரீட் சோமையா இந்த வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இஸ்லாமியர்களின் அடாவடித்தனம் என குறிப்பிட்டுள்ளார். கட்கோபர் பீனிக்ஸ் மால் அருகே இளம் இந்து நண்பர்கள் இஸ்லாமிய மதவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

8 சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதில் 5 சிறார்களின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், சம்பவ இடத்தில் இன்று மாலை செல்ல இருப்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் காணப்படும் இளைஞர்கள் அனைவருமே மைனர்கள் ஆவர். அவர்கள் அந்த ஆண் - பெண் ஜோடியை கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவதையும் வீடியோவில் காண முடிந்தது. வாக்குவாதம் சட்டென வன்முறையாக மாறியது. சிலர் அந்த ஆணை மரக்கட்டையால் தாக்குவதை பார்க்க முடிந்தது. ஒரு சிலர் அவரை ஆக்ரோஷமாக கையால் குத்துவதையும் பார்க்க முடிந்தது.
கும்பல் அந்த நபரை தாக்கிய போது, உடன் இருந்த பெண் தடுக்க முயற்சித்ததையும் வீடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு வழியாக அந்த கும்பலிடம் இருந்து ஜோடி தப்பிச் சென்றது. சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து அந்த கும்பலின் மீது காவல்துறையினர் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறார்களின் பெற்றோர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தவ் தாக்கரே சிவசேனா, பஜ்ரங் தள் அமைப்பினர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பஜ்ரங் தள இயக்கத்தினர் அந்த பூங்காவில் போராட்டம் நடத்தினர். பூங்காவின் காவலரையும் கடுமையாக விமர்சித்தனர். உரிய பாதுகாப்பு இல்லையெனில் எதற்கு இத்தனை மக்களை அனுமதிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர்.
பூங்காவை நிர்வகிக்கும் மும்பை மாநகராட்சி வரும் நாட்களில் பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறும்பட்சத்தில், தாங்களே இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்வோம் என்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கடுமையான எச்சரித்தனர்