கைதான இரண்டு நபர்களுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிருக்கலாம் என அதிகாரிகளால் சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்கள் மகாதீப் கௌர் (21), தவிந்தர் சிங் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.
ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்பு குழுவினர் (ATS), ஸ்ரீகங்காநகர் காவல் துறையினர், பஞ்சாப் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த கைது நடந்துள்ளது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று இரவு 9.45 மணிக்கு, ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் ராம்சிங்பூர் பகுதியில் 50 ஜிபி கிராமதத்திற்கு அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இரண்டு தண்டவாளங்களை தாங்கி நிற்கும் சிமெண்ட் கட்டைகள் இரண்டு சேதம் அடைந்தன.
இதனால், சுமார். 2.5 அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சுமார் 75 நிமிடங்களுக்கு முன்பு, அனுப்கர்க் சுரத்கர்க் பயணிகள் ரயில் அந்த பகுதியை கடந்துச் சென்றிருக்கிறது.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாகிஸ்தானை சேர்ந்த சாச்சா மற்றும் ஷா என்ற பெயருடையே இரண்டு நபர்களுடன் மகாதீப் கௌர் தொடர்பில் இருந்தார் என தெரியவந்துள்ளது. ரொமான்டிக்காக பேசியும், பண ஆசை காட்டியும் கௌரை பாகிஸ்தான் நபர்கள் சிக்க வைத்ததாக போலீசார் குற்றஞ்சாட்டினர்.
வெடிகுண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக கௌர் பணம் பெற்றதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக தற்போது சிறையில் இருக்கும் தனது கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில், மகாதீப் கௌரிடம் இருந்து இரண்டு ஆயுதங்கள், 46 தோட்டாக்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தங்குமிடம் அளித்து, பைக் கொடுத்து, குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு போக்குவரத்து வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்து உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 3 பேர் காவலில் எடுத்துள்ளனர்.
பிகானெர் ஐஜி ஓம் பிரகாஷ், ஸ்ரீகங்காநகர் எஸ்பி ஹரிசங்கர் ஆகியோர் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது...? சம்பவத்தன்று நடந்தது என்ன...? என்பதை விரிவாக விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ரயில் சேவையை அன்றைய தினம் ரத்து செய்தனர். இதனால் பல ரயில் சேவைகள் ரத்து தெரிவித்துள்ளார். அனைத்து பணிகளும் சீர்செய்யப்பட்ட பின்னர் நவம்பர் 5ஆம் தேதிதான் மீண்டும் சேவைகள் தொடங்கின. ரயில்வே அதிகாரிகளும் முறைப்படி புகார் அளித்திருந்தனர்.
முன்னர், எல்லைப் பகுதிகளில் 7.5 கிலோ RDX வெடிக்குண்டு போலீசாரிடம் சிக்கியிருந்தது. ரயில்வே தண்டவாளங்களில் நடந்த குண்டுவெடிப்புக்கும் RDX குண்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என காவல்துறை முன்னரே விளக்கம் அளித்திருந்தது.