Indian Railways: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது நண்பர்கள் என ஒரு பெரிய குழுவாக ரயிலில் பயணம் செய்யத் திட்டமிடும் நபர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது.
தென்மேற்கு ரயில்வே (South Western Railway), மொத்தமாக அல்லது குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக, ஒரே நேரத்தில் பலருக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிதாகிவிட்டது. புதிய விதிகளின் படி, ஒரு குழுவிற்காக முன்பதிவு செய்யக்கூடிய பெர்த்துகளின் (இருக்கைகள்/படுக்கைகள்) எண்ணிக்கையில் இனி எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.
தென்மேற்கு ரயில்வே செய்துள்ள இந்த மாற்றத்தால் மொத்தமாக பல டிக்கெட்களை முன்பதிவு செய்யும் பயனிகளுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. உதாரணமாக, திருமணம் அல்லது அது போன்ற நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்யும் குடும்பங்கள், சுற்றுலா செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், யாத்ரீகர்கள் மற்றும் போட்டிகளில் பங்குகொள்ள செல்லும் விளையாட்டு அணிகளுக்கு இந்த விதி மாற்றம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்வேயின் புதிய விதிமுறைகள் மற்றும் குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை குறித்து இங்கே காணலாம்.
இந்த வசதி அனைத்து வகையான பயண வகுப்புகளுக்கும் (classes) பொருந்தும். விண்ணப்பங்களை காலை 9:00 மணி முதல் சமர்ப்பிக்கலாம். புதிய ரயில்வே விதிகளின்படி, முக்கிய முன்பதிவு மையங்களில் குழு டிக்கெட் முன்பதிவுக்கான விண்ணப்பங்கள் காலை 9:00 மணி முதல் ஏற்றுக்கொள்ளப்படும். இது பொதுப் பயணிகளுக்கான முன்பதிவு தொடங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் கழித்து அமைகிறது.
அதாவது, ஒரு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் நாளிலேயே, குழு முன்பதிவுக்கான விண்ணப்பங்களையும் காலை 9:00 மணி முதல் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் செல்லும் பயணம் மற்றும் திரும்பும் பயணம் ஆகிய இரண்டிற்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், ரயில்வே விதிகளின்படி ரிடர்ண் டிக்கெட்டுக்கும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ரிடர்ண் டிக்கெட் முன்பதிவு ஒரு தனி முன்பதிவாகவே கருதப்படும். இந்த மாற்றம் தற்போது தென்மேற்கு ரயில்வே மண்டலத்திற்கு (South Western Railway zone) உட்பட்ட குழு மற்றும் மொத்த முன்பதிவு விதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த இந்திய ரயில்வே நெட்வொர்க்கிற்கும் பொருந்தும் புதிய கொள்கையாகக் கருதப்படக்கூடாது.