Tamil Nadu government scholarship : ஆதிதிராவிடர் நல மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்களுக்கு மிக முக்கியமான புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுடைய மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் 'ஒருமுறைப் பதிவேடு' செய்து, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் முடித்த பின்னரே கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கடந்த 26.10.2026 அன்று இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தமிழ்நாடு இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் 16.11.2026 அன்று முக்கியச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய படிப்படியான வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ்க்கண்ட 5 படிநிலைகளைப் பின்பற்றித் தங்களது OTR எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்:
இணையதளத்திற்குச் செல்லுதல்: முதலில் [https://scholarships.gov.in/otrapplication/#/](https://scholarships.gov.in/otrapplication/#/) என்ற தேசிய கல்வி உதவித்தொகை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
கைப்பேசி எண் பதிவு: இணையதளத்தில் கேட்கப்படும் OTP மற்றும் Captcha குறியீடுகளை உள்ளீடு செய்து, கைப்பேசி எண் பதிவு நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.
ஆதார் சரிபார்ப்பு முதல் கட்டம்: ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் மூலம் சரிபார்ப்பை முடித்தவுடன், தற்காலிக OTR குறிப்பு எண் (Reference Number - எ.கா: R24-0011***) மாணவரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
முக அங்கீகாரம் 2ம் கட்டம்: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து NSP OTR செயலி மற்றும் Aadhaar Face RD ஆகிய இரண்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், கிடைத்த OTR குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி eKYC முக அங்கீகாரத்தை கைப்பேசி கேமரா மூலம் வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
OTR எண் மற்றும் கடவுச்சொல் பெறுதல்: அனைத்துச் சரிபார்ப்புகளும் வெற்றிகரமாக முடிந்தவுடன், மாணவருக்கான நிரந்தர OTR எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.
தனியாக விண்ணப்பிப்பது அவசியம்: OTR எண்ணைப் பெறுவது மட்டுமே கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்ததாகக் கருதப்படாது. OTR எண்ணைப் பெற்ற பிறகு, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தையும் தனியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் இல்லாதவர்களுக்கான மாற்று வழி: OTR பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமாகும். இருப்பினும், இதுவரை ஆதார் எண் ஒதுக்கப்படாத மாணவர்கள், அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி ஆதார் பதிவு ஒப்புகை எண் மூலம் பதிவு செய்யலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட OTR கூடாது: ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு OTR எண் மட்டுமே அனுமதிக்கப்படும் (பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் தங்களது இரண்டு சிறார் குழந்தைகளுக்காக அதிகபட்சம் இரண்டு OTR எண்களை உருவாக்கலாம்). ஒரே மாணவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட OTR எண்கள் உருவாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வி உதவித்தொகைத் தகுதி ரத்து செய்யப்படக்கூடும். எனவே, ஏற்கனவே OTR எண் பெற்றவர்கள் மீண்டும் பதிவு செய்யக்கூடாது.
புதிய கல்வி நிறுவனங்கள் NSP இணையதளத்தின் 'Institutes' பிரிவில் தங்களது UDISE, AISHE அல்லது NCVT குறியீட்டைப் பயன்படுத்தி KYC பதிவை மேற்கொள்ள வேண்டும்.
நிறுவன ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் கல்வி நிறுவனத் தலைவர் ஆகியோர் தங்களது விவரங்களைப் பதிவு செய்து OTP சரிபார்ப்பு மற்றும் முக அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
KYC படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, புகைப்படம், கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் சான்றொப்பமிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த நிறுவனங்கள் சுயவிவரப் புதுப்பிப்பு மற்றும் முக அங்கீகாரத்தை முடிக்க வேண்டும்.
கல்வி நிறுவன அலுவலர்கள் மாணவர்களின் விண்ணப்பச் சரிபார்ப்பு நடவடிக்கைகளை எவ்விதத் தாமதமுமின்றி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை மாணவர்களுக்குத் தெரிவித்து, தகுதியுடைய அனைவரும் OTR பதிவு மற்றும் முக அங்கீகாரத்தை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், OTR பதிவு செய்யாத மாணவர்களையும், தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்களையும் கண்டறிந்து, பள்ளிகள் மூலமாக உரிய உதவிகளை வழங்கி உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.