Xi Jinping India Visit: டெல்லியில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை இந்தியா வருகை தருவார் என்று பெய்ஜிங் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை, ஒரு வழக்கமான பலதரப்பு சந்திப்பு என்பதையும் தாண்டி, உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தும் ஒரு முக்கிய உத்திசார் நடவடிக்கையாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பெரும்பாலும் கடினமான, குழப்பமான, போட்டித்தனை வாய்ந்த ஒரு வினோதமான உறவே இருந்துள்ளது. இந்திய சீன எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுவதொடு, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற ரீதியிலேயே இரு நாடுகள் கொண்டுள்ள நட்பு நாடுகளின் பட்டியலும் இருந்துள்ளது.
இருப்பினும், இந்தியா சீனா இடையில் நட்பிற்கான முயற்சிகளும் அவ்வப்போது தொடர்ந்து மெற்கொள்ளப்படுவதை மறுப்பதற்கில்ல. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தீவிரமான "நம்பிக்கை இடைவெளி" காரணமாக சீனா-இந்தியா உறவுகளில் பெரிய முன்னேற்றம் ஏதும் இருக்காது என்று பெரும்பாலான நிபுணர்கள் கருதினார்கள். ஆனால், அதை இந்த பிரிக்ஸ் மாநாடு பொய்யாக்கிவிட்டது.
கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்ளவில்லை. அந்த நிலையில், சீனா எல்லைத் தகராறு கொண்டிருக்கும் இந்தியாவில் நடக்கும் இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டிற்கு நிச்சயம் ஜி ஜின்பிங் வரமாட்டார் என்றே கூறப்பட்டது.
ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் அவர் நாளை இந்தியா வரவுள்ளார். சீன அதிபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்க ஏன் முடிவு செய்தார் என்பது குறித்து குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்படுகிறது. சீன அதிபர் இந்தியா வருவதற்கு பின்னால் பல உலகளாவிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அவற்றில் சில முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.
இந்தியாவுக்கான பயணம் உட்பட ஜி ஜின்பிங்கின் தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்களை, மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி ஜின்பிங்-டிரம்ப் உச்சிமாநாட்டிற்கான அவரது நிலையை வலுப்படுத்தும் முயற்சியாகவே சீன நிபுணர்கள் கருதுகின்றனர். ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் இராஜதந்திரம் போன்ற துறைகளில் சாதகமான பேரம் பேசும் அம்சங்களைச் சேகரிப்பதே இந்தத் தொடர் பயணங்களின் நோக்கம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
ஜி ஜின்பிங்-டிரம்ப் உச்சிமாநாடு, சீன அதிபரின் டெல்லிப் பயணத்தை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் அணுக வைக்கிறது. இது பிரிக்ஸ் அல்லது இந்தியா-சீனா இடையிலான உறவுகள் சார்ந்தது மட்டுமல்ல. இந்த பயணங்களின் மூலம், இந்த மாத இறுதியில் டிரம்ப்பை ஒரு வலுவான நிலையில் இருந்து அணுகுவதற்கான ஏற்பாடுகளை சீன அதிபர் செய்து வருகிறார்.
இரண்டாவதாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் நிர்வாகக் கட்டமைப்புகளில் சீர்திருத்தம் போன்ற குறிப்பிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி, 'குளோபல் சவுத்' பிராந்தியத்தில் பொதுவான வளர்ச்சி மற்றும் சர்வதேச நிர்வாகச் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு களமாகவும் சீனா பிரிக்ஸ் உச்சிமாநாட்டைப் பார்க்கிறது.
இவ்விகாரங்கள் உலகளாவிய பலமுனைத் தன்மையுடன் தொடர்புடையவை. இதில் இந்தியாவும் சீனாவும் ஒரே குரலில் பேசினால், அது அமெரிக்காவைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியாகக் கருதப்படலாம்.
அமெரிக்க டாலரைத் தவிர்த்து, நாடுகளுக்கு இடையே நேரடித் தீர்வு காணும் முறைகள் குறித்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும். எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்க இந்தியா 'மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை' (CBDCs) ஊக்குவித்து வருகிறது. 'டிஜிட்டல் யுவான்' பயன்பாட்டை விரிவுபடுத்தி வரும் சீனாவுக்கு இது ஒரு சாதகமான வாய்ப்பாக இருக்கும்.
ஆனால் இந்த அணுகுமுறையில் இந்தியா, சீனா ஆகிய இரு தரப்பும் ஒரே மாதிரியாக இல்லை. சீனாவை மையமாகக் கொண்ட எந்தவொரு நிதி ஒழுங்குமுறையிலும் இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது. பொதுவான நாணய மாற்றீட்டை ஆதரிப்பதற்குப் பதிலாக கட்டண முறைகளை இணைக்க இந்தியா விரும்புகிறது.
நான்காவதாக, அண்டை நாடுகளாக இருக்கும் சீனாவும் இந்தியாவும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்று பலர் கருதுகின்றனர். ஆகையால், சில வரலாற்று ரீதியான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அடுத்த கட்டத்தை நோக்கிச் செயல்படுவது சாமர்த்தியமானதாக இருக்கும் என சீன அதிபர் எண்ணுவதாகவும் சர்வதேச விவகார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த பிரிக்ஸ் உச்சிமாநாடு பல வகைகளில் இந்தியாவிற்கு சாதகமானதாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் நடக்கும் இந்த முக்கிய கூட்டத்திற்கு உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பிரதிநிதிகளை அனுப்பாமல் தாங்களே நேராக வர முடிவெடுத்தது இந்தியா மீதுள்ள நம்பிக்கையையும், இந்தியாவுடனான உறவிற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக, ஆசிய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் நட்பு அடிப்படையிலான புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினால், அது இந்த 2 நாடுகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பிராந்திய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் வகையில் அமையும்.