தஞ்சாவூரில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி சதய விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆன்மீக தலம் என்பதை தாண்டி பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழரின் கட்டடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் உள்ளது என்பதால் தஞ்சை பெரிய கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. அப்படிப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை கட்டி, குடமுழுக்கு நடத்திய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா தஞ்சையில் பெரியளவில் கொண்டாடப்படும்.
1/5
மாமன்னன் ராஜராஜ சோழன்
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னனான ராஜராஜ சோழன். இவர் 1010ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கை நடத்தினார்.
2/5
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம்
அந்த வகையில், வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்த ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாப்படுகிறது.
3/5
1,041 சதய விழா
இந்நிலையில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி சதய விழா கொண்டாடப்படுகிறது. 1,041வது சதயவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் வளாகத்தில் இன்று பந்தக்கால் நடப்பட்டது. பொதுவாக சதய விழா இரண்டு நாட்கள் நடைபெறும். வரும் அக்டோபர் 21ஆம் தேதி பெரிய கோவில் வளாகத்தில் கருத்தரங்கம், சொற்பொழிவு, கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
4/5
அக்டோபர் 22 நிகழ்வுகள் என்னென்ன?
அதேநேரத்தில், வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஓதுவார்கள் வீதி உலா நடைபெறும். ராஜராஜ சோழன் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைக்கு சிறப்பு யாகம் நடத்தப்படும். பெரிய கோவிலில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மங்கல பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்படும். ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும். சதய விழாவை காண மாவட்டத்தில் இருந்து பலரும் வருகை தருவார்கள்.
5/5
அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அந்த வகையில், சதய விழா தினத்தன்று, வரும் அக். 22ஆம் தேதி (வியாழன்) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 14ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.