SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புதுவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆலோசனை!

கிழக்கு கடற்கரைச் சாலை மேம்பாடு, காரைக்கால் சாலைப் பணிகள், நுழைவு வாயில்கள் அழகுபடுத்துதல் மற்றும் 130 புதிய பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காரைக்கால் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் மறுசீரமைப்புக்கு ரூ.57 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Shiva Murugesan
Published: Aug 11, 2026, 06:36 PM IST | Updated: Aug 11, 2026, 06:50 PM IST
Join

புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலவரம் குறித்து துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, தலைமைப் பொறியாளர் வீரசெல்வன், சிறப்பு அலுவல் அதிகாரி நிர்மலா, கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் அனைத்து கோட்ட செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோப்புகளை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவு

கூட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து நிதி மற்றும் ஒப்பந்தப் புள்ளி கோப்புகளையும் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் நகர சாலை விளக்குகள், அழகுபடுத்தும் பணிகள் உள்ளிட்டவை தேவையான சான்றிதழ்கள் மற்றும் நிர்வாக அனுமதிகளைப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால் சாலைப் பணிக்கு ரூ.57 கோடி

காரைக்கால் நகரப் பகுதியில் சாலைகளை அகலப்படுத்துவதுடன், கழிவுநீர் கால்வாய்களை மறுசீரமைக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பீட்டு செலவு ரூ.57 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோரிமேடு எல்லை நுழைவு வாயில் மற்றும் காளாப்பட்டு நுழைவு வாயில் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கதிர்காமம் கலைக்கல்லூரியில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினை காரணமாக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

130 புதிய பேருந்து நிறுத்தங்கள்

புதுச்சேரியில் 130 பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பேருந்து நிறுத்தங்களுக்கான வடிவமைப்புக்கு ஒப்புதல் கிடைத்ததும் பணிகளுக்கு டெண்டர் விடப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கைகளையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் துறை சார்ந்த திட்டங்கள், டெண்டர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்துவதுடன், சாலை, விளக்கு, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவது தெரியவருகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES