புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
Puducherry: டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஒன்று கோரிமேடு அரசு மருத்துவமனையில் அமைக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதுச்சேரி நிர்வாகம் இதை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஒன்று கோரிமேடு அரசு மருத்துவமனையில் அமைக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் ஆ.அன்பழகன் முதல்வர் என்.ரங்கசாமியிடம் திங்கட்கிழமை மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர், புதுச்சேரியில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். அரசு பொது மருத்துவமனையில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் அனுமதிக்கப்படுவதால், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை வசதிகளை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | புதுச்சேரி, காரைக்கால் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 27-ல் குறைதீர்வு முகாம்
இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் என்.ரங்கசாமி, டெங்கு பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு ஏதும் இல்லாததால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
சிகிச்சைக்காக கோரிமேடு காசநோய் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவும், பிற மருத்துவமனைகளிலும் போதிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், மழைநீர் தேங்குவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அரசு சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு பாதிப்பால் இருவர் பலி
புதுச்சேரியில் கடந்த சில நாட்களில் 19 வயது இளம்பெண் மற்றும் 23 வயது இளைஞர் என இருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
19 வயது இளம்பெண் உயிரிழப்பு: புதுச்சேரி மூலக்குளம் பிச்சைவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிணி டெங்கு பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை உயிர் இழந்தார், இவருக்கு வயது 19. காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
23 வயது இளைஞர் உயிரிழப்பு: முதலியார்பேட்டை, அனிதா நகரைச் சேர்ந்த முகமது இர்பான் (23) என்பவர், காய்ச்சல் காரணமாக முதலில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IGMCRI) அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஜிப்மர் (Jipmer) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்; அங்கு அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவர் உயிரிழந்தார்.
முன்னதாக நவம்பர் 19 அன்று மட்டும், இங்கு சுமார் 46 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 43 பேர் புதுச்சேரி பகுதியையும், 3 பேர் காரைக்கால் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு பாதிப்பு விவரங்கள்:
- மொத்தம் 1,362 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன
- இதில் புதுச்சேரி பகுதியில் மட்டும் 1,232 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதியில் கடந்த ஆண்டுகளில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை வருமாறு:
- 2021: 1,625,
- 2022: 1,673,
- 2023: 2,790,
- 2024: 128,
- 2025: 902
2026 ஆம் ஆண்டு, இந்த மாதமும் கடந்த மாதமும்தான் (அக்டோபர் மற்றும் நவம்பர்) அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் 151 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.