புதுச்சேரி: தெலங்கானாவிலிருந்து சுற்றுலா வந்த மாணவர்கள், புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள பகுதியில் வங்கக் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த அலையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலையில் சிக்கித் தவித்த மாணவர்களை லைப்கார்டு வீரர்கள் உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர்.
வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. புதுச்சேரி தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சனிக்கிழமையான நேற்று, தலைமைச் செயலம் எதிரே உள்ள கடல் பகுதியில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என பலர் கூடியிருந்தனர். புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சில கல்லூரி மாணவர்களும் அங்கு வந்தனர். அப்பகுதியில் குளிக்க தடை இருந்தபோதிலும், மாணவர்கள் கடலில் இறங்கி குளிக்கத் தொடங்கியுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பலத்த அலையில் சிக்கிக்கொண்டனர். ஒரு மாணவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் கடல் அலைகளில் சிக்கிக்கொண்டதாகவும், அவரை மீட்க மற்ற மாணவர்களும் சென்று, அவர்களும் அலையில் சிக்கியதாகவும் கூறப்படுகின்றது.
மாணவர்கள் அலையில் சிக்கியதைக் கண்ட உள்ளூர் உயிர்காக்கும் பணியாளர்கள் (lifeguards) உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, மாணவர்களைப் பத்திரமாக கரைக்குக் கொண்டு வந்தனர். தங்களிடம் இருந்த ஒரே ஒரு லைப் ரிங் கொண்டு கடலில் உடனடியாக இறங்கிய லைப்கார்டுகள் உயிரை பணயம் வைத்து மாணவர்களை காப்பாற்றினர்.
மீட்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தெலங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு மாணவர் மட்டும் கடல் நீரை அதிகமாக குடித்துவிட்டிருந்ததால் அவர் புதுச்சேரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
கல்லூரி மாணவர்கள் குளிக்கத் தொடங்கியபோதே பாதுகாப்பு பணியில் இருந்த லைப்கார்டு வீரர்கள் அங்கு குளிக்ககூடாது என எச்சரித்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் குளிக்கச்சென்றதால் அலையில் சிக்கிகொண்டனர். எனினும், லைப்கார்டுகளின் துரித நடவடிக்கையால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் கூறும் அறிவுறைகள் மற்றும் விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து நடப்பது மிக அவசியம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக அமைகின்றது.