உலகப் புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலும் ஒன்று. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆன்மீகத்திற்கு மட்டுமின்றி கலைத்திறனை பறைசாற்றுவதிலும் முதன்மையானது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள சில கலைஞர்களின் கலைத்திறனைக் கண்டு உலகமே வியக்கிறது. பண்டைய காலங்களில் சுவாமியின் திருமேனியை சிற்பிகள் செதுக்கியது போல், இன்றும் சுவாமியின் திருவுருவம் வெளியே புகைப்படங்களாக உலகிற்கு தெரிகிறது என்றால், அதற்கு பின்னாலும் ஒரு கலைஞர் இருக்கிறார்.
அந்த வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக இறைப்பணி செய்து வருபவர்தான் சேகர். மூன்று தசாப்தங்களாக இவர் தனது கேமராவின் மூலம் சுவாமியை படம்பிடித்து வர, அவர் பதிவு செய்த புகைப்படங்களே சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி சாமானிய பக்தர் வரை அனைவருக்கும் இவர் எடுக்கும் புகைப்படங்களே சென்றடைகின்றன. வாகன சேவையின் போது சுவாமியின் மீதும், சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீதும் கேமரா லென்ஸை ஃபோகஸ் செய்துகொண்டிருந்தவரிடம், நமது ஜீ ஊடகம் பேட்டி கண்டது.

(திருப்பதி தேவஸ்தான புகைப்படக் கலைஞர் சேகர்)
புகைப்படக் கலைஞராக அவர் ஆற்றி வரும் இறைப்பணி குறித்தும், அவரது இத்தனை ஆண்டுகால அனுபவம் குறித்தும் இந்த பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவரது பேட்டியின் சுருக்கத்தை இங்கு காணலாம்.
செய்தியாளர்: நீங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இறைப்பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீங்களே எடுத்துள்ளீர்கள். நீங்கள் எடுக்கும் படங்கள் உலகம் முழுவதும் பரவி புகழ்பெறும் போது உங்களுக்குள் என்ன தோன்றுகிறது...?
சேகர்: இவை அனைத்தும் எனக்கு இறைவன் கொடுத்தது. இறைவனின் கருணையால் கிடைத்தது. அதனால்தான் என்னைப் போன்றவர்களால் அவரது திருவடியில் பணியாற்ற முடிகிறது. இதைத் தவிர இதற்கு மேல் சொல்வதற்கும் ஒன்றுமே இல்லை. என் கண்களால் அவரைப் பார்க்கிறேன். அதையே மக்களுக்கும் காட்டுகிறேன், அவ்வளவுதான்.

செய்தியாளர்: ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். நீங்கள் உங்கள் கண்களால் சுவாமியை எப்படி பார்க்கிறீர்களோ, அதையே உங்கள் கேமரா லென்ஸிலும் அடக்குகிறீர்களா...?
சேகர்: ஆம், அதை தான் சொல்கிறேன். மனதாலும் கண்களாலும் பார்த்து உணர்ந்துதான் புகைப்படம் எடுக்கிறேன். அவ்வளவுதான்.

செய்தியாளர்: உங்களின் இறைப்பணியில் எப்போது மன நிறைவு கிடைக்கிறது...? ஒரு புகைப்படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் வரும்போது உங்கள் மன உணர்வு எப்படி இருக்கும்?
சேகர்: நான் முன்பே கூறியது போல, இது அனைத்தும் பெருமாளின் அருள் மற்றும் கருணை. இதனால் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. இதை தவிர சுவாமியிடம் நான் வேறு எதையும் கேட்பதே இல்லை.
செய்தியாளர்: இப்போது பலரும் மொபைலில் படம்பிடிக்கிறார்கள். ஆனால் உங்களின் புகைப்படங்கள் தனித்து தெரிகின்றன. நீங்கள் எடுக்கும் புகைப்படம் பக்தர்களுக்கும் பெருமாளுக்கும் பாலமாக இருக்கிறது. இதை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?
சேகர்: எனக்கு தெரியவில்லை. எல்லாம் பகவான் கொடுத்த சக்திதான். இத்தனை ஆண்டுகளாகப் பணிபுரியும் சக்தியை அவரே தந்திருக்கிறார். அந்த சக்தியைக் கொண்டு நான் எனது கண்களால் பார்த்து புகைப்படம் எடுக்கிறேன்.

செய்தியாளர்: உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை ஒன்றுதான். அதே பகவான், அதே பக்தர் கூட்டம், அதே வாகன சேவை. ஆனால் உங்கள் பார்வை ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கிறது. புதிய கோணங்களில் புகைப்படங்களை எடுக்கிறீர்கள். அதை பார்த்து பக்தர்கள் பாராட்டும்போது எப்படி உணர்வீர்கள்?
சேகர்: மிகவும் மகிழ்ச்சியாக உணர்வேன். எப்போதும் இளைஞர்களிடம் இருந்தும், புதிய தலைமுறைகளிடம் இருந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். இப்போது புதிதாக வரும் இளைஞர்கள் எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறார்கள் என்று பார்க்கிறேன். அவர்களுடன் போட்டியிட்டு அவர்களின் பார்வையில் இருந்தும் கற்றுக்கொண்டு வித்தியாசமாக படமெடுக்க முயல்கிறேன். எனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இதைதான் செய்து வருகின்றேன்.
செய்தியாளர்: அப்படியென்றால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மாணவர் தானா...?
சேகர்: ஆம், வாழ்நாள் முழுவதும் நான் மாணவன் தான். புகைப்படக் கலைஞர் என்பவரே வாழ்நாள் மாணவர்தான்.

செய்தியாளர்: பகவானை படம் பிடிப்பவர்களுக்கு முதன்மையாக என்ன தகுதி இருக்க வேண்டும்? அவர்களின் பார்வை, மனநிலை எப்படி இருக்க வேண்டும்?
சேகர்: இறைவனை மனதாரப் பார்த்து படம் எடுக்க வேண்டும். கண்களாலும் மனதாலும் புகைப்படம் எடுப்பவர்களுக்குத் தேவைப்படுவது பக்தி மட்டும்தான். ஆழ்ந்த பக்தி இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
செய்தியாளர்: உங்களுடைய முதல் பணியையும், இப்போது நீங்கள் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சேகர் என்ற கலைஞர் எங்கிருந்து எந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்?
சேகர்: அதை மக்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது.

செய்தியாளர்: பகவானை தரிசனம் செய்வதற்கு செல்லும்போது, அதாவது கைகளில் கேமரா இன்றி வெறும் கண்களால் சுவாமியை தரிசிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?
சேகர்: எனது மனதில் எதுவும் தோன்றாது. நான் மனதார பகவானிடம் எதையும் கேட்பதும் இல்லை. அவரிடம் நான் எதையும் வேண்டியதும் இல்லை. எந்த பிரார்த்தனையும் வைத்ததில்லை. மனதாரப் பார்த்து, நெஞ்சில் அவரை பதிவு செய்துகொண்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான்.

செய்தியாளர்: நமது ஜீ மீடியா வாயிலாக ஒரு தீவிர பக்தராக நீங்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சேகர்: இறைவனுக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் இறைவனைக் காணுங்கள். செய்யும் தொழிலிலேயே இறைவனைக் காண வேண்டும்.
இதுவரை யாருக்கும் பேட்டி அளிக்காத திருமலை திருப்பதி தேவஸ்தான புகைப்படக் கலைஞர் சேகர் நமது ஜீ மீடியாவிடம் முதல்முறையாக தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பேட்டியின் நடுவே நீங்கள் பார்த்த அனைத்து புகைப்படங்களும் சேகர் எடுத்தவை தான்.

கடந்த 30 ஆண்டுகளாக திருப்பதி எழுமலையானுக்கு இறைப்பணி ஆற்றுவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார், சேகர். ஒவ்வொரு தருணமும் அவருக்கு புதிய விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது. அதை கற்றுக்கொள்ளும் மாணவனாக அவர் இருக்கிறார். தினந்தோறும் புத்தம் புதிய நுணுக்கங்களை அறிந்துகொண்டு சுவாமிக்கு சேவையாற்றி வருகிறார். இதை நாமும் நமது பணியில் கடைபிடித்தால் இவரை போல் நிச்சயம் மன அமைதியும், மன நிறைவும் ஏற்படும்.