கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் டோரதி. இந்த படம் குறித்த விவரத்தையும் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில் வெளியாகி சமூகத்தில் பெரிய விவாதத்தை கிளப்பிய ஒரு திரைப்படம், ‘டோரதி’. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க-சனத், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது “ஒரு வேளை சுப்ரமணியபுரம் படம் போல இருக்குமோ, ஒரு வேளை வில்லேஜ் கேங்ஸ்டர் படம் போன்றதாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். படமும் முதல் பாதி வரை அப்படித்தான் சென்றது. ஆனால், இடைவேளைக்கு பிறகு கதை அப்படியே திரும்பி விட்டது.
டோரதி திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் திருநங்கையும், கார்த்தி எனும் கதாப்பாத்திரமும் முத்தம் கொடுத்துக்கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதை பார்த்த பலர், “அய்யய்யோ, கலாச்சாரம் கெட்டுப்போச்சு, ஒரு ஆணும் ஆணும் முத்தம் கொடுத்துக்கிறாங்க, இதெல்லாம் தமிழ் படங்கள்ல காமிக்கலாமா” என இணையத்திலும் ஊடகத்தினரிடமும் கதற ஆரம்பித்தனர்.
இதை பார்த்து தியேட்டருக்கு சென்றவர்களும் கூட, “இணையத்தில் பார்த்தது போல இல்லையே, படம் நல்லத்தான இருக்கு” என்று ரிவ்யூ காெடுத்தனர். ஏற்கனவே வெளிநாட்டு திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்ற டோரதி திரைப்படத்திற்கு, மக்கள் கொடுத்த இந்த அங்கீகாரம் இன்னும் பெரிய உத்வேகத்தை கொடுத்து.
டோரதி படத்தை பார்த்த விமர்சகர்களும், இந்த படம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பேசுகிறது என்பதை தாண்டி, மனிதத்தை போற்றும் படம் என்று கூறினர். கூடவே, திருநங்கைகள் பலர் சந்திக்கும் குடும்ப வன்முறைகளை இந்த திரைப்படம் பேசுவதாகவும் தெரிவித்தனர்.
டோரதி திரைப்படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. இந்த சமயத்தில், இப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்கிற எதிர்பார்ப்பும் அனைவருக்கும் எழுந்தது. தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டோரதி திரைப்படம், இந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளமே இதை தங்கள் தளத்தில் உறுதி செய்துள்ளது.
டோரதி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷை தவிர பிற நடிகர்கள் அனைவரும் சிறிய பட்ஜெட் படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர்கள்தான். இந்த படமும் சின்ன பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டது. இப்படம், தற்போது வரை சுமார் ரூ.17.62 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஓடிடியிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரிஷிகாந்த் ஒரே ஆண்டில் நடித்த இரண்டு திரைப்படங்களும் தற்போது பெரிய ஹிட் அடித்துள்ளது. அதில் ஒரு படம், மொத ராத்திரி. இந்த படத்தில் அவரது ‘மருது’ எனும் கதாப்பாத்திரம் படு பிரபலமாகி விட்டது. இதையடுத்து டோரதி திரைப்படத்திலும் அவருடைய கார்த்தி கதாப்பாத்திரம் மக்களை கவர்ந்தது. இதனால், அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாகி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் தனக்கென்ற பெரிய வாய்ப்பை தேடி வந்த ரிஷிகாந்திற்கு, இந்த இரு படங்களும் தகுந்த அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.