Asian Games 2026: ஆசிய விளையாட்டுத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியா இன்று தற்போதுவரை மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறது.
வில்வித்தையில் குங்கும் மோஹோட் மற்றும் கோஃல்ப் விளையாட்டில் பிரணவி அர்ஸ் ஆகியோர் இன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தனர். இந்நிலையில், ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது.
ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரி என 61 ரன்களை குவித்தார்.
அதேபோல் திலக் வர்மா 22 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 51 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் சிவம் தூபேவும் 15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 27 ரன்களை குவித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது.
தொடர்ந்து 212 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஆனால் மிடில் ஆர்டரில் ஹசன் நவாஸ் - சயும் அயூப் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ஆட்டத்தை பரபரப்பாக்கினர். இந்த ஜோடி 48 பந்துகளில் 87 ரன்களை அடித்தது. ஹசன் நவாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்டுத்த சயும் அயூப் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஹசன் நவாஸ் மட்டுமே போராடினார். மற்ற பேட்டர்கள் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 96 ரன்களை அடித்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவரால் சதமும் அடிக்க முடியவில்லை, அணியை வெற்றிக்கும் அழைத்துச் செல்ல இயலவில்லை.
19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பாகிஸ்தான் வெள்ளி பதக்கத்தை பெற்றது. காலையில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றது. 2023இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரிலும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது.
நடப்பு தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றிருந்தது. மொத்தம் இந்திய அணி 19 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 81 பதக்கங்களை பெற்றிருக்கிறது. பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது.
𝙂𝙊𝙇𝘿-standard performance ✨🥇
Scorecard ▶️ https://t.co/g4wzZagyGj#TeamIndia | #AsianGames | @OfficialAbhi04 pic.twitter.com/RB9vv1ikcb— BCCI (@BCCI) October 3, 2026