சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் கோச்... யார் இந்த கேரத் பேட்டி...?
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளர் கேரத் பேட்டி நியமிக்கப்பட இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என்றும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Gareth Batty, Chennai Super Kings: ஐபிஎல் 2027 மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் ஏலத்திற்கு விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், ஒவ்வொரு அணியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மினி ஏலத்திற்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல நிர்வாக மாற்றங்களைச் செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பல புதிய அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
சிஎஸ்கேவின் புதிய பேட்டிங் கோச்
இந்தச் சூழலில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கேரத் பேட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இணைய வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ
இதுகுறித்து times of india இணையத்தளத்திற்கு காசி விஸ்நாதன் கூறுகையில், "அவருடன் (கேரத் பேட்டி) ஆலோசனை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் இருக்கும்" என பதிலளித்துள்ளார். இதன்மூலம் கேரத் பேட்டி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஜாகீர் கானின் நெருங்கிய நண்பர்
சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர் கானும், கேரத் பேட்டியும் நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். இருவரும் கவுண்டி போட்டிகளில் Worcestershire அணிக்கு விளையாடிய நேரத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர்.
தற்போது இங்கிலாந்து Surrey கவுண்டி அணியின் தலைமை பயிற்சியாளராக கேரத் பேட்டி செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் Surrey அணி 2022, 2023, 2024 ஆகிய மூன்று சீசன்களில் அடுத்தடுத்து கவுண்டி சாம்பியன்ஷிப்பை வென்றது.
மேலும் 2025 சீசனிலும் இறுதிப்போட்டி வரை வந்தது. இவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான், ஒல்லி போப், வில் ஜாக்ஸ், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தேர்வாகினர்.
யார் இந்த கேரத் பேட்டி...?
49 வயதான கேரத் பேட்டி இங்கிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னராக விளையாடி உள்ளார். 2002 முதல் 2016 வரை இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 9 டெஸ்ட், 10 ஓடிஐ, ஒரே ஒரு டி20ஐ போட்டியில் இவர் விளையாடி உள்ளார். சர்வதேச போட்டிகளில் 20 விக்கெட்டையும், 183 ரன்களையும் இவர் எடுத்துள்ளார்.
இருப்பினும் 261 முதல் தர போட்டிகளில் விளையாடி 682 விக்கெட்டுகளையும்; 7,399 ரன்களையும் அடித்துள்ளார். அதேநேரத்தில் டி20 போட்டிகளில் 155 விக்கெட்டுகளையும்; 630 ரன்களையும் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 255 விக்கெட்டுகளையும்; 2,374 ரன்களையும் எடுத்துள்ளார்.
சிஎஸ்கேவில் நடக்கும் மாற்றங்கள்
சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களாக (2024, 2025, 2026) பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே இந்தளவிற்கு மோசமாக தொடர்ச்சியாக செயல்பட்டது இல்லை. இதற்கு முன் 2020, 2022 ஆகிய சீசன்களில் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆப் வராமல் இருந்தது.
சிஎஸ்கே அணி தற்போது பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. 2009ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங் அவரது பொறுப்பில் இருந்து விலகியதும், ஜாகீர் கான் அப்பொறுப்புக்கு வந்தார்.
மைக்கல் ஹசி பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கேரத் பேட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எரிக் சைமன்ஸ் பந்துவீச்சு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், மோகித் சர்மா பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். ஜேம்ஸ் பாஸ்டரும் பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் பொல்லார்ட்... JSK அணிக்கு ஆப்பு...?