இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக நடைபெற உள்ள ஒருநாள் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், கே.எல். ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 01) நடைபெற்ற வலைப்பயிற்சியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீசாளர்களான ஆகிப் நபி, அன்ஷுல் கம்போஜ் மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் சீனியர் வீரர்களுக்கு பந்துவீசி பயிற்சி அளித்தனர். இதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியின் பந்துவீச்சு விராட் கோலிக்கு கடும் சவாலாக அமைந்தது.
பயிற்சியின்போது குர்னூர் பிரார் தனது உயரத்தை பயன்படுத்தி அதிக பவுன்ஸ் கொண்ட பந்துகளை வீசினார். அன்ஷுல் கம்போஜ் துல்லியமான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், ஆகிப் நபியின் பந்துவீச்சுதான் அதிக கவனத்தை பெற்றது. சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர், தனது பந்துவீச்சு திறமையை மீண்டும் நிரூபித்தார்.
குறிப்பாக பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து கோலியை தொடர்ந்து சோதித்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை விளையாட முயன்றபோது, கோலியின் பேட்டில் படாமல் பலமுறை பந்து சென்றது. அதேபோல், உள்ளே திரும்பி வந்த பந்துகள் அவரது கால்களிலும் தொடை பாதுகாப்பு வசத்திலும் பட்டன.
இதனால் ஆகிப் நபியின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரம்ப்பட்ட கோலி, சில நேரங்களில் வெளிப்படையாகவே எரிச்சலடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது . அதேநேரத்தில் சில நேரங்களில் அற்புதமான ஷாட்களையும் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
வலைப்பயிற்சியின்போது ரோகித் சர்மாவும் மிகவும் கவனமாக பேட்டிங் செய்தார். அதிரடியாக விளையாடுவதற்கு பதிலாக, பந்தின் வேகத்தையும் ஆடுகளத்தின் தன்மையையும் கணித்து தற்காப்பு மற்றும் அதிரடி ஷாட்களை கலந்து விளையாடினார். பின்னர் கே.எல். ராகுலும் பயிற்சியில் இணைந்து பேட்டிங் செய்தார். ருதுராஜ் கெய்க்வாட்டும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார். இந்த பயிற்சியின்போது சுப்மன் கில் பங்கேற்கவில்லை.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆகிப் நபி, உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தவர். குறிப்பாக 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்காற்றினார். அந்த தொடர்ல் மட்டுமே 60 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த நிலையில், காயம் காரணமாக பிரசித் கிருஷ்ணா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ஆகிப் நபி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், சீனியர் வீரர்களுக்கு இளம் பந்துவீச்சாளர்கள் அளித்த இந்த பயிற்சி சவால், ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.