இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ
ஏசிசி ஆடவர் ஆசிய கோப்பை ரைஸ்ஸிங் ஸ்டார் தொடரில், பாகிஸ்தான் ஏ அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி தோல்வியைத் தழுவியது. கேப்டன் திலக் வர்மா 149 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களை அடித்ததும் வீணானது. இந்தபோட்டியிலும் இரு அணி வீரர்களும் கைக் குழுக்கவில்லை.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) நடத்தும் ஆடவர் ஆசிய கோப்பை ரைஸ்ஸிங் ஸ்டார் தொடரில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் நவ. 23 (ஞாயிறு) அன்று மோதின.
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி கேப்டன் ஷாபாஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா ஏ அணிக்கு திலக் வர்மா தலைமை தாங்கி வருகிறார்.
313 ரன்களை குவித்த இந்தியா ஏ
அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.2 ஓவரில் 313 ரன்களை அடித்து ஆல்-அவுட்டானது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 79, மாஸ் சதாக்கத் 59, பர்ஹான் யூப் 56 ரன்களை அடித்தனர். இந்திய அணி பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், சூர்யான்ஷ் ஷெக்டே, விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். ஆயுஷ் பதோனி ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்.
இந்திய அணி பந்துவீச்சின் போது 40வது ஓவரில் பாகிஸ்தானின் ரந்தாவா - ஹர்ஷித் ராணா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரந்தாவா பேட்டிங் செய்தபோது ஹர்ஷித் ராணா நோ-பால் வீசினார், அதில் ரந்தாவா ஒரு ரன்னை எடுத்து நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் வீரர்களுடன் ஹர்ஷித் ராணா வாக்குவாதம்
அதேபோல், பாகிஸ்தான் ஏ அணியின் ஓபனர் ஷமீல் ஹுசைனை ஆட்டமிழந்தபோது ஹர்ஷித் ராணா ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆயுஷ் பதோனி பந்துவீச்சில் வந்த கேட்சை ஹர்ஷித் ராணா பிடித்தார். ஹர்ஷித் ராணாவின் இந்த வெறித்தனமான கொண்டாட்டத்தால் மறுமுனையில் இருந்த மற்றொரு ஓபனர் மாஸ் சதாக்கத் ஹர்ஷித் ராணாவுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடும் பரபரப்புக்கு இடையே 314 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. வைபவ் சூர்யவன்ஷி 11, ஆயுஷ் பதோனி டக்அவுட்டாக இந்திய அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை அடுத்தடுத்த ஓவர்களில் இழந்து பரிதவித்தது.
இந்திய அணியின் சொதப்பலான தொடக்கம்
திலக் வர்மா - அபிஷேக் சர்மா ஜோடி சற்று ஆறுதல் அளித்தது. திலக் சைலண்ட் மோடில் இருக்க அபிஷேக் சர்மா வழக்கம்போல் அதிரடி காட்டினார். அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களை அடித்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 93 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்திருந்தது. 16வது ஓவர்தான் வீசப்ப்டு வந்தது. அபிஷேக் சர்மா அவசரம் காட்டாமல் விளையாடியிருந்தால் இன்னும் அதிக ரன்களை அவரால் அடித்திருக்க முடிந்திருக்கும்.
திலக் வர்மா - ஷாபாஸ் அகமது மிரட்டல் ஜோடி
குமார் குஷாக்ரா 2, ரிங்கு சிங் 6, சூர்யான்ஷ் ஹெக்டே 3 ரன்களை எடுத்து சீட்டு கட்டுப் போல் சரிந்தனர். 7வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஜோடி சேர்ந்த ஷாபாஸ் அகமது 108 பந்துகளில் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷாபாஸ் அகமது 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகளுடன் 56 ரன்களை அடித்து இக்கட்டான கட்டத்தில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவுக்கு பின் இந்த போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட்தான் அதிகமாக இருந்தது, அவராலும் கடைசி வரை களத்தில் நிற்க முடியவில்லை, 44வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
போராடி சதம் அடித்த திலக் வர்மா
அடுத்த பந்திலேயே விப்ராஜ் நிகம் டக்அவுட்டானார். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா அவர் எதிர்கொண்ட 2வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சின் போதே பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை ஹர்ஷித் ராணா வெளிப்படுத்தியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஏ வீரர்கள் பலர் ஒன்றிணைந்து ஹர்ஷித் ராணா வெளியேறும்போது வெறித்தனமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். 9 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கடைசி 34 பந்துகளில் 70 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் திலக் வர்மா, பிரின்ஸ் யாதவுடன் சேர்ந்து ஆறுதல் அளித்தார்.
திலக் வர்மா அவர் சந்தித்த 148வது பந்தில் சதம் அடித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 149 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 100 ரன்களை சேர்த்திருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் அலி ராஸா, ஹசன் நவாஸ் தலா 3 விக்கெட்டையும், முகமது இம்ரான் ரந்தாவா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் ஏ அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியிருந்தது.
சிறப்பாக விளையாடிய திலக் வர்மா
களத்தில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. வார்த்தை போர் தொடர்ந்துக் கொண்டே இருந்தது. இருப்பினும் இந்திய அணி கேப்டன் திலக் வர்மா நிதானமாக இருந்து சூழலை அருமையாக கையாண்டார். ஆட்டத்தை சிறப்பாக விளையாடியது ஒருபுறம் என்றால், பாகிஸ்தான் வீரர்களிடம் அமைதியையே வெளிப்படுத்தினார்.
கைக்குழுக்காத இரு அணி வீரர்கள்
அதேநேரத்தில், சமீபத்திய வழக்கப்படி இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் கைக்குழுக்கிக் கொள்ளவில்லை. பி பிரிவில் 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்திய அணி 2 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது. நேபாள் 3வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த பிரிவில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறது.
கடைசி லீக் போட்டி
இந்தியா ஏ - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையே செவ்வாய்கிழமை (நவ. 24) கடைசி லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா வென்றாலே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும். நேபாளம் அணியை கடந்த வெள்ளிக்கிழமை 306 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நெட் ரன்ரேட்டை இந்தியா ஏ அதிகப்படுத்தி உள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறுமா?
இந்திய அணி நேபாள போட்டியை வெல்லும்பட்சத்தில் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அல்லது வங்கதேச ஏ அணியுடன் மோதும். ஒருவேளையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அவரவர் அரையிறுதியில் வென்றால், இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் மோதலை எதிர்பார்க்கலாம். இறுதிப்போட்டி அடுத்த ஞாயிறு (நவ. 29) இதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க | முகமது சிராஜ் நீக்கம்... 'இஸ்லாமியர்' என்பதால் இடமில்லையா...? உண்மை இதோ Explained