IND vs WI, Team India ODI, Test Squad: இன்றுடன் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20ஐ தொடர் நிறைவடைகிறது. அடுத்து இந்திய அணி நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20ஐ, 5 ஓடிஐ மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.
ஏற்கெனவே இந்திய டி20ஐ ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில், ஓடிஐ மற்றும் டெஸ்ட் ஸ்குவாடை பிசிசிஐ நேற்றிரவு (அக்.17) அறிவித்தது. ஓடிஐ தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடைபெற இருப்பதால், முதல் மூன்று ஓடிஐக்கு ஒரு ஸ்குவாடும், கடைசி இரண்டு ஓடிஐக்கு மற்றொரு ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் ஸ்குவாடில் ஒரு சில சீனியர் வீரர்கள் விளையாட இருப்பதால், கடைசி இரண்டு ஓடிஐ போட்டியில் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுப்மான் கில், கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா, அன்சுல் கம்போஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று ஓடிஐ போட்டிக்கு சுப்மான் கில் கேப்டனாக செயல்படுவார், கடைசி இரண்டு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஸி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடைசி இரண்டு போட்டியில் இஷான் கிஷனுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
🚨 News 🚨 #TeamIndia’s ODI and Test squads for New Zealand tour announced 📝 Captain Shubman Gill will lead the side for the first 3️⃣ ODIs, before Shreyas Iyer takes charge for the last 2️⃣ matches. More details ▶️ https://t.co/npwxUYlb1N #NZvIND https://t.co/3ckm7ixgEN
— BCCI (@BCCI) October 16, 2026
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 5 போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். ஜெய்ஸ்வால் ஓடிஐ தொடருக்கு தேர்வாகவில்லை. நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், நமன் திர், குர்னூர் பிரர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் 5 ஓடிஐ போட்டிகளுக்கும் தேர்வாகி உள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் இடம்பெற்ற ஜடேஜா ஒட்டுமொத்தமாக ஓடிஐ தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடைசி இரண்டு போட்டிக்கு திலக் வர்மா, ஆகிப் நபி, குமார் குஷாக்ரா, யாஷ் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் கில் கிடையாது என்பதால் இஷான் கிஷன் ஓபனராக களமிறங்குவார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கடைசி 2 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.
பிரசித் கிருஷ்ணா உடற்தகுதி அடைந்தால் மட்டுமே அவர் ஓடிஐ தொடரில் விளையாடுவார். இல்லையெனில் நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என தெரிகிறது. பும்ராவுக்கு டி20ஐ தொடரை போலவே, ஓடிஐ தொடர் முழுவதும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.
மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருக்கு ஓடிஐ, டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை கொண்டு இந்திய அணி நியூசிலாந்து பயணிக்கிறது.
டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, அன்சுல் கம்போஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் நீண்ட நாளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அன்சுல் கம்போஜ் கடந்தாண்டு இங்கிலாந்து தொடரின் போது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆகாஷ் தீப் கடைசியாக கடந்தாண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் தற்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இரானி கோப்பை தொடரில் காயத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், உடற்தகுதி பெற்றால் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவார். பேக்அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி திரும்பி உள்ளார். சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் 5 ஓடிஐ மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் தேர்வாகி உள்ளனர்.
டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெற்றிருக்கும் ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், அன்சுல் கம்போஜ் ஆகியோர் இந்தியா ஏ ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிவரை மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.