தோனி கொடுத்த டிப்ஸ்... பந்துவீச்சில் உதவியது எப்படி? - சாய் கிஷோர் பகிர்ந்த சீக்ரெட்
வெவ்வேறு கோணத்தில் பந்துவீசும்போது, பந்து வெவ்வேறு விதமாக செயலாற்றுகிறது என்றும் இதை தனக்கு தோனிதான் அழுத்தமாக கூறியதாகவும் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அணியில் யோ மகேஷின் பங்க, ரஞ்சி கோப்பை கனவு, ஸ்டோக்ஸின் வைரல் விக்கெட் உள்ளிட்ட பல அனுபவங்களை சாய் கிஷோர் பகிர்ந்துகொண்டார்.
Sai Kishore: தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் முதல் வெற்றியை ருசித்திருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தும் ஜஸ்ட் மிஸ்ஸில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற முடியாமல் போய், ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில், கடந்த முறை அரையிறுதி வரை வந்து மிரட்டிய உத்தரகாண்ட் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியை பெற்றதன் மூலம் நிச்சயம் தமிழ்நாடு அணியின் நம்பிக்கை டபுள் மடங்கு அதிகரித்திருக்கும்.
யோ மகேஷ் வருகை
தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் குழு இந்தாண்டு மாற்றம் கண்டிருக்கிறது. யோ மகேஷ் தலைமை பயிற்சியாளராக வந்த பின்னர் தமிழ்நாடு அணி பெற்றிருக்கும் முதல் வெற்றி இது. போட்டிக்கு பின்னர் தமிழ்நாடு அணி வீரர்களும் யோ மகேஷ் அணியில் செலுத்தும் தாக்கம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
வலைப்பயிற்சியில் பல்வேறு சவாலான சூழல்களை கொடுத்து வீரர்களை யோ மகேஷ் ஆட்டத்திற்கு தயார்படுத்துவதாக இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பின்னர் (அக். 19) பிரதோஷ் ரஞ்சன் பால் தெரிவித்திருந்தார்.
அதேபோல் நேற்று (அக். 20) ஹாட்ரிக் எடுத்து, ஆட்டத்தை வென்ற சாய் கிஷோரிடம், கேப்டனாகவும் பௌலராகவும் எப்படி தனித்தனியாக யோசித்து செயல்படுகிறீர்கள்...? மூன்று சிறந்த ஸ்பின்னர்கள் அணியில் இருக்கும்போது கேப்டன்ஸி சுமையை எப்படி கையாள்கிறீர்கள்...? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
யோ மகேஷ் குறித்து சாய் கிஷோர்
அதற்கு அவர், "நான் இதில் (கேப்டன்ஸியில்) யோ மகேஷை அதிகம் சார்ந்திருக்கிறேன். ஏனென்றால், பந்துவீசும் போதும், நான் பந்துவீச்சாளராக மட்டும் இருக்க விரும்புகிறேன். கேப்டன்ஸி குறித்து அதிகம் யோசிக்க விரும்பவில்லை, அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்கிறேன்.
எப்போதும் அவரை பார்த்திருப்பேன், அவர் எங்கு குதிக்க சொல்கிறாரோ, எந்த கேள்வியும் இன்றி அங்கு குதித்துவிடுகிறேன். நான் முழுமையாக அவரிடம் சரணடைந்துவிட்டேன். அவருக்கு எது சரியாக தோன்றுகிறதோ, அதே திசையில் நாங்களும் பயணிக்கிறோம். போட்டி முடிந்த பின்னர் வியூகங்கள் குறித்து கலந்தாலோசிப்போம். ஆனால் போட்டியின் போது யோ மகேஷ் என்ன சொல்கிறாரோ, அதையே செய்கிறேன், அது கைக்கொடுக்கிறது" என்றார்.
ரஞ்சி கோப்பையை வெல்வதே டார்கெட்
மேலும் வலைபயிற்சியில் கடும் சவால்களை யோ மகேஷ் அளிப்பதாக கூறப்பட்ட நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு எந்தளவிற்கு அவர் சவால் அளித்தார் என்ற கேள்விக்கு, "பௌலர்களுக்கு அதிகம் சவால்களை தந்தார். எங்களை மன ரீதியாகவும் தயார்படுத்துகிறார். தமிழ்நாடு அணி எப்போதும் சிறப்பாக செயல்பட்டாலும், ரஞ்சி கோப்பையை மட்டும் வெல்ல முடிந்ததில்லை.
அதுகுறித்து அவர் (யோ மகேஷ்) அதிகம் உரையாடுகிறார். எனவே அதிலும் முழு கவனத்தையே செலுத்துகிறோம்" என சாய் கிஷோர் பதிலளித்தார். அதேநேரத்தில் விக்கெட் வீழ்த்தினாலும் பெரியளவில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையை வென்றால் மட்டுமே தன்னால் முழுமையான கொண்டாட்டத்தை வெளிப்படுத்த இயலும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தோனியால் மாற்றமடைந்த பௌலிங்
மேலும், இரண்டு இன்னிங்ஸிலும் அவர் பல்வேறு கோணங்களில் பந்துவீசுவது குறித்தும், இதற்கு பின்னணியில் உள்ள பயிற்சி குறித்தும் சாய் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இவ்வாறு பல்வேறு கோணங்களில் பந்துவீசுவதற்கு தோனியும் ஒரு காரணம் என பதிலளித்திருந்தார்.
"சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும்போது இதை நான் கற்றுக்கொண்டேன் என நினைக்கிறேன். தோனி அதுகுறித்து என்னிடம் அதிக சொல்லியிருக்கிறார். ஆனால், அப்போது அவர் சொல்வதை புரிந்துகொள்ளும் திறன் என்னிடம் இல்லை. ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக அதில் கவனம் செலுத்த தொடங்கினேன். அதாவது, 2025 ஐபிஎல் தொடரில் இருந்து...
நான் வெவ்வேறு கோணத்தில் இருந்து பந்துவீசும்போது, வெவ்வேறு விதமாக பந்து மாறுபாடு அடைகிறது. எனவே, அதை சிறப்பாக செய்ய தொடங்கினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதை செய்ததற்கு இப்போது பலன் கிடைக்கிறது என நினைக்கிறேன்" என்றார்.
ஸ்டோக்ஸ் விக்கெட் குறித்து...
அதேபோல், கவுண்டி கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய வீடியோ அதிகளவில் வைரலானது. அதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
"சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு, அவர் யாராக இருந்தலும் சரி, இத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு பேட்டருக்கு எதிராக டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும்போது, அது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
ஏனென்றால் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வரை, டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. எனவே, இத்தனை டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரரை உங்களால் வீழ்த்த முடிந்தால், அது எனது திறமையின் மீது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது" என்றார்.
அடுத்து தமிழ்நாடு அணி வரும் அக். 26ஆம் தேதி ரயில்வேஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. அடுத்த நவ. 4ஆம் தேதி சண்டிகர் அணியை சண்டிகரில் எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. BCCI அறிவிப்பு!