2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இந்த காலகட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிகள் சர்வதேச போட்டிகளில் களமிறங்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஆசிய விளையாட்டின் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28 முதல் நடைபெற உள்ளன. மறுபுறம் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. 2வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 30 ஆம் தேதியும், 3 வது ஒருநாள் போட்டி அக்டோபர் 3 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதில் குறிப்பாக அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 3வது ஒருநாள் போட்டி நடைபெறும் நிலையில், ஆசிய விளையாட்டில் இந்திய அணி இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரண்டு வெவ்வேறு இந்திய அணிகள் ஒரே நாளில் களமிறங்கும் சூழல் உருவாகலாம்.
ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கவுதம் கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சீனியர் இந்திய அணியுடன் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட அனுபவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் ஆசிய விளையாட்டு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மட்டுமல்லாமல் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ தொடர் மற்றும் இரானி கோப்பை உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகின்றன. மொத்தமாக 69 இந்திய வீரர்கள் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு 15 மைதானங்களில் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அட்டவணை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்தியா தனது முன்னணி வீரர்களை உள்ளடக்கிய அணியை அனுப்பி உள்ளது. கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இரண்டாம் நிலை அணியை களமிறக்கியிருந்தது. அந்த அணி தங்கப் பதக்கமும் வென்றது. இந்த நிலையில், 2026 தொடருக்கு முக்கிய வீரர்கள் அடங்கிய அணியை இந்தியா தேர்வு செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் சில முன்னணி கிரிக்கெட் நாடுகள் தங்களது மாற்று அல்லது இரண்டாம் நிலை அணிகளை அனுப்பி உள்ளன. இதனால் இந்தியா ஏன் தனது முக்கிய வீரர்களை விளையாட்டு போட்டிக்கு ப்யன்படுத்துகிறது என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான விவிஎஸ் லக்ஷ்மன் தொடர்பாகவும் இந்த விவகாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசிய விளையாடு போட்டிகளை இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட இருந்த லக்ஷ்மன், வலுவான நியை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இரண்டாம் நிலை அணியை அனுப்பினால் அந்த தொடரில் பங்கேற்பது குறித்து அவர் தயக்கம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வலுவான அணியை அனுப்பாததால் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றால், அதற்கான பொறுப்பு தன் மீது வரக்கூடாது என்பதற்காகவே லக்ஷ்மன் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய வீரர்களை தொடர்ந்து வெவ்வேறு தொடர்களில் பயன்படுத்துவது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வீரர்களின் பணிச்சுமை மற்றும் காயங்கள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்குவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டி முக்கியமானதாக இருந்தாலும் அதற்காக முன்னணி வீரர்களை பயன்படுத்துவதால் அடுத்தடுத்த தொடர்களில் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கலாம் என்ற கவலையும் இருப்பதாக கூறப்படுகிறது.
விவிஎஸ் லக்ஷ்மன் எதிர்காலத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம் என்ற பேச்சு ஏற்கனவே இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணி தேர்வு தொடர்பான இந்த விவகாரம் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், லக்ஷ்மனின் எதிர்கால பதவி குறித்து பிசிசிஐ இறுதி முடிவு எடுத்துவிட்டதாக கூறுவதற்கு தற்போது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனவே, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணித் தேர்வு மற்றும் லக்ஷ்மனின் நிலைப்பாடு தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும்போதுதான் தெளிவாகும்.