SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அண்ணன் சீர் திட்டம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்!

அண்ணன் சீர் திட்டத்தில் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை பெற ஆதார் கட்டாயம் என தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 20, 2026, 02:16 PM IST | Updated: Oct 20, 2026, 02:28 PM IST
Join

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அண்ணன் சீர் திட்டம்’ தொடர்பான விரிவான அரசாணையைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மணப்பெண்களுக்கு அடையாளச் சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நெறிமுறைகள், தகுதிகள் மற்றும் மாற்று ஆவணங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களைச் சமூக நல இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் மற்றும் முக்கிய பலன்கள்

ஏழைப் பெண்களின் திருமணச் செலவுகளைக் குறைத்து, அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு, திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை ஆகியவை அரசின் சார்பில் ‘அண்ணன் சீர்வரிசையாக’ வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தகுதி வரம்புகள்

இத்திட்டத்தின் பலன்களைப் பெற மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

குடும்ப வருமானம்: விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

திருமணத் தேதி: இந்தத் திட்டம் அக்டோபர் 5 அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இத்திட்டம் சமூக நல இயக்குநரகம் வாயிலாகக் கள அளவில் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

ஆதார் அட்டை சமர்ப்பிப்பது கட்டாயம்

திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணுக்கான ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். இதுவரை ஆதாருக்கு விண்ணப்பிக்காத அல்லது ஆதார் எண் பெறாத பெண்கள், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பாகவே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அருகிலுள்ள பதிவு மையங்களை அணுகி ஆதாருக்குப் பதிவு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பெண்கள் சிரமமின்றி ஆதார் பெற ஏதுவாக, சிறப்பு முகாம்களை அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை பயன்படக்கூடிய மாற்று ஆவணங்கள்

ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு, அதற்கான எண் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில் உள்ள பெண்கள் திட்டத்தின் பலனைத் தவறவிடாமல் இருக்க, தற்காலிகமாக மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆதார் பதிவுச் சீட்டு உடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்கலாம்:

புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் நிலையக் கணக்குப் புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் கடன் அட்டை / கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வட்டாட்சியர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றிதழ், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்பட அடையாள அட்டை

இந்த ஆவணங்கள் அரசு அதிகாரிகளால் முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே திட்டத்திற்கான உதவித்தொகை மற்றும் பொருட்கள் விடுவிக்கப்படும்.

பயோமெட்ரிக் அங்கீகாரச் சிக்கல்களுக்கான தீர்வு

கைரேகை தேய்மானம் அல்லது மூப்பு காரணமாகக் கைரேகை அங்கீகாரம் தோல்வியடையும் பட்சத்தில், பயனாளிகள் அலைக்கழிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது:

கைரேகை பதிவாகாத சூழலில், கருவிழி ஸ்கேன் அல்லது முக அங்கீகாரம் முறையைப் பயன்படுத்திச் சரிபார்க்க வேண்டும்.

இந்த இரு வழிகளிலும் அங்கீகாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டால், ஆதார் கடிதத்தில் இடம்பெற்றுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பலன்களை வழங்கலாம்.

மேற்கண்ட அனைத்து தொழில்நுட்ப நடைமுறைகளும் தோல்வியுற்றால், மத்திய அரசு வகுத்துள்ள விதிவிலக்கு கையாளுதல் நடைமுறைகளைப் பின்பற்றி உரிய தகுதியுள்ள பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் பயன்கள் தடையின்றி சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES