Sivakasi Crackers: தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரமான சிவகாசி, பல பெருமைகளைத் தன் வசம் கொண்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இதனை அதன் தொழில் வலிமையைக் குறிக்கும் வகையில் "குட்டி ஜப்பான்" என்று அழைத்தார். சிவகாசி "இந்தியாவின் பட்டாசு நகரம்" என்றும் "இந்தியாவின் பட்டாசுத் தலைநகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று, பட்டாசுத் துறையில் உள்ள மற்ற அனைத்து போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் முறைப்படுத்தப்பட்ட பட்டாசு வணிகத்தில் சுமார் 85 சதவீத பங்களிப்பை சிவகாசி வழங்குகிறது. இந்த நிலையில், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும், பட்டாசுகளின் ஏற்றுமதி மூலம் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் முன்னேறும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO), சிவகாசியில் ஒரு பொது வசதி மையத்தை (Common Facility Centre) அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பட்டாசு உற்பத்தி மையமான சிவகாசியில், அதிக மதிப்புள்ள பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த பைரோடெக்னிக்ஸ் தயாரிப்புகளுக்குத் தொழில்துறையை விரிவுபடுத்த இந்த மையம் உதவும்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள 'சிவகாசி பைரோடெக்னிக் பொது வசதி மைய'த்திற்கான (Sivakasi Pyrotechnic Common Facility Centre - SPCFC) திட்ட அறிக்கை மற்றும் நிதி பகுப்பாய்வைத் தயாரிக்க, விருப்பக் கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த மையம் சோதனை, சான்றிதழ் பெறுதல், ஆராய்ச்சி, தானியங்கி மயமாக்கல், திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வணிகமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த மையமாகச் செயல்படும்.
இதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து TIDCO-வின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்பு ஆலோசகருக்கு உண்டு.
இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சுமார் 85-90 சதவீதம் சிவகாசியிலிருந்தே வருகிறது. டெண்டர் ஆவணத்தின்படி, இங்குள்ள 1,070-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற உற்பத்தி அலகுகள், ஆண்டுக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டுகின்றன. இவை நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், சுமார் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாகவும் உள்ளன.
வேலைவாய்ப்பு, வருவாய் என பல வகைகளில் சிவகாசி ஒரு சிறந்த தொழில் ஆதாரமாக இருந்தாலும், இந்தத் தொழில் மையம் பல கட்டமைப்புச் சவால்களை எதிர்கொள்கிறது. அவற்றில் சில:
முன்மொழியப்பட்ட இந்த மையம், இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்வதோடு, பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த பைரோடெக்னிக்ஸ் துறைகளில் கால் பதிக்கவும் வழிவகுக்கும்.
சிவகாசியை பாரம்பரிய பட்டாசு உற்பத்தி மையத்திலிருந்து, உலகளவில் போட்டியிடக்கூடிய பைரோடெக்னிக்ஸ் மையமாக மாற்ற, TIDCO ஏழு ஒருங்கிணைந்த பிரிவுகளை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்சஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TANFAMA) தலைவர் கணேசன் பஞ்சுராஜன், இந்த முன்னெடுப்பிற்காக முதலமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தத் திட்டம், அதிக மதிப்புள்ள உற்பத்தி, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிலையான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மாநில அரசின் பரந்த முன்னெடுப்பைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கான மொத்த முதலீடு அல்லது கட்டுமான காலக்கெடு குறித்த விவரங்கள் டெண்டரில் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையில், ஐரோப்பாவைச் சேர்ந்த, 6,000 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட முன்னணி பட்டாசு இறக்குமதி நிறுவனம் ஒன்று சிவகாசியிலுள்ள உற்பத்தியாளர்களிடம் தனது முதல் ஆர்டரை வழங்கத் தயாராகி வருவதாகத் தொழில் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத் தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா மேற்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் சர்வதேச வர்த்தக அணுகுமுறைகளின் காரணமாக, சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசுகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுவதே இதன் தனிச்சிறப்பாகும். உலகளாவிய பட்டாசுச் சந்தையில் 95 சதவீத ஆதிக்கத்துடன் சீனா முதலிடத்தில் உள்ளது. குறைந்த உற்பத்தி செலவு, மூலப்பொருட்கள் எளிதாகக் கிடைப்பது மற்றும் பல்வகை வடிவமைப்பு போன்ற காரணங்களால் சீனா முன்னணியில் திகழ்கிறது.
இந்நிலையில், இவ்வளவு பெரிய திறமை இருந்தும் நாம் இதுவரை ஏற்றுமதி செய்யாமல் இருந்தோம் என்றும், சட்டப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி பாலிசி உருவாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். அருகில் துறைமுகம் இருப்பதாலும், இந்த ஐரோப்பிய ஆர்டர் கிடைத்துள்ளதாலும், உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். பொருளாதாரத்தில் 2-ம் இடத்தில் இருக்கும் சிவகாசியை மேலும் உயர்த்த பல வாய்ப்புகள் உள்ளன என சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.