தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Tamil Nadu: தமிழ்நாட்டில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில், புதிய மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. இது மது பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் மதுக்கடைகள் (TASMAC Shops) உள்ள நிலையில், புதிய மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. திடீரென உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க காரணம் என்ன?
புதிய டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், நல்லம்பிள்ளை கிராமத்தில் உள்ள நவாக்கினத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடையைத் திறக்க அரசு எடுத்த முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நவக்கிணத்துப்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தங்கள் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"திருச்சி மாவட்டம் நல்லம்பிள்ளை கிராமம் நவகிணத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்லம்பிள்ளை மற்றும் அமயபுரம் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கரட்டுப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் ஒரே முக்கிய பாதையில் இந்தக் கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்த கிராமத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், அதிகாரிகள் தங்கள் திட்டத்தைக் கைவிடவில்லை. ஆகையால், கிராமத்தின் நலன் கருதி இங்கு புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்."
தமிழ்நாட்டில் ஏன் புதிய டாஸ்மாக் கடைகள்? உயர் நீதிமன்றம் கேள்வி
நல்லம்பிள்ளை பகுதியில் ஏற்கனவே மதுக்கடை இல்லாததாலேயே அங்கு புதிய கடையைத் திறக்கத் திட்டமிடப்பட்டதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், "ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஏன் புதிய கடைகளைத் திறக்கிறீர்கள்?" என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகள் இருப்பதால், புதிய கடைகளின் தேவை இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை அனுமதித்து, தமிழ்நாடு முழுவதும் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசின் வருமானம் குறைந்துள்ளதா?
- முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.
- இதன் மூலம், மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,765-லிருந்து 4,048-ஆகக் குறைந்தது.
- இருப்பினும், மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT) வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- ஒட்டுமொத்த வருவாய் 2023-24-ல் ரூ. 45,855.70 கோடியிலிருந்து 2024-25-ல் ரூ. 48,381.01 கோடியாகவும், தொடர்ந்து 2025-26-ல் ரூ. 50,845.84 கோடியாகவும் அதிகரித்தது.
- இக்காலகட்டத்தில், கலால் வரி வருவாய் ரூ. 10,774.28 கோடியிலிருந்து ரூ. 11,835.82 கோடியாக உயர்ந்தது.
- அதேவேளையில், மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) வசூல் ரூ. 35,081.42 கோடியிலிருந்து ரூ. 39,010.02 கோடியாக அதிகரித்தது.
மேலும் படிக்க | TN Rain Alert: அக்வான் புயல்; இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
ஒரு கிராமது மக்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக எழுப்பிய குரலும், டாஸ்மாக் கடைக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்பும் தமிழகம் முழுவதும் புதிய மதுக்கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கும் முக்கிய நீதிமன்ற உத்தரவாக உருவெடுத்துள்ளது.
இப்போது உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வந்தது முதல், இது குறித்து பொதுமக்களிடையே பல கேள்விகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ஏற்கனவே உள்ள கடைகள் மூடப்படுமா என்பது முக்கிய கேல்வியாக உள்ளது. எனினும், நீதிமன்றத்தின் உத்தரவு புதிதாக கடைகளைத் திறப்பது பற்றியது மட்டுமே ஆகும். ஏற்கனவே உள்ள கடைகளைப் பற்றி உத்தரவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழக அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுமா?
தமிழக அரசு புதிய டாஸ்மாக் கடைகளுக்கான திட்டங்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்த உத்தரவால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். ஏனெனில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது. புதிய கடைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஆகையால், தற்போது வந்துள்ள நீதிமன்ற உத்தரவு நிச்சயம் வருமான இழப்புக்கு வழிவகுக்கும்.