TNPSC latest news : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களை இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக நிரப்புவதற்கான சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத்திருத்த மசோதாவை' தாக்கல் செய்தார். அம்மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்களை இங்கேத தெரிந்து கொள்ளுங்கள்
வெளிப்படையான நடைமுறை: மிகவும் திறமையான, தொழில்முறை சார்ந்த மற்றும் வெளிப்படையான ஆள்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கும் முறையைச் சீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தொலைதூர இளைஞர்களுக்கு வாய்ப்பு: இம்முடிவின் மூலம் மாநிலத்தின் கடைக்கோடி மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் சமமான வேலைவாய்ப்பு கிடைக்க வழி ஏற்படும்.
கூடுதல் பணி ஒப்படைப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பணி டி.என்.பி.எஸ்.சி.-யிடம் கூடுதல் செயல்பணியாக ஒப்படைக்கப்படுகிறது.
அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள்: குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கான வருடாந்திர அறிவிப்புகளில், இனி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அலுவலகப் பணியிடங்கள் (Junior Assistant, Typist, Bill Collector, AE, JE) கூடுதலாக சேர்க்கப்படும் என்பதால் மொத்தக் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பெருமளவு உயரும்.
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளூர் அளவில் ஒப்பந்த முறையிலோ அல்லது பிற வழிகளிலோ நடைபெற்று வந்த நியமன நடைமுறைகள் மாறி, தகுதி மற்றும் மெரிட் அடிப்படையில் மட்டுமே வெளிப்படையாகப் பணி நியமனங்கள் நடக்கும்.
ஏற்கனவே உள்ள பாடத்திட்டமே போதுமானது: உள்ளாட்சிப் பணிகளுக்கெனப் புதிதாகத் தனிப் பாடத்திட்டம் இருக்காது; வழக்கமான பொதுத் தமிழ்/தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் கணிதம் அடங்கிய TNPSC பாடத்திட்டமே தொடரும்.
நேரடி கலந்தாய்வு: மாநில அளவிலான பொதுத் தேர்வு மற்றும் தரவரிசைப் பட்டியலின்படி இடஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி வெளிப்படையான கலந்தாய்வு மூலமே பணியிடங்கள் நிரப்பப்படும்.