தமிழகத்துக்கு இனி இன்னொரு பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ்வே: சென்னை - கோவை - தூத்துக்குடி புதிய சாலை
Tamil Nadu expressway : சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே அதிவேக தொழில் வழித்தட சாலை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu expressway : தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் வகையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் மூன்று முக்கியத் தொழில் மற்றும் துறைமுக நகரங்களான சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய 'தொழில்துறை எக்ஸ்பிரஸ்வே வழித்தடம்' அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் கடந்த 20.11.2026 அன்று அதிகாரப்பூர்வ இ-டெண்டர் அறிவிப்பு ளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! தடபுடலாக தயாராகும் 3 விளையாட்டு மைதானங்கள்
தமிழகத்தில் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் முதுகெலும்பாக சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று நகரங்கள் திகழ்கின்றன. சென்னையில் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கோவையில் ஜவுளி, பம்ப், மோட்டார் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளன. அதேபோல், தூத்துக்குடியில் துறைமுகம், ரசாயனம், மின் உற்பத்தி, உப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில்கள் செழித்துள்ளன. ஆனால், இந்த மூன்று முக்கிய நகரங்களையும் நேரடியாக இணைக்கும் வகையில் அகலமான, அதிவேக எக்ஸ்பிரஸ்வே சாலைகள் இதுவரை இல்லை.
தற்போதுள்ள சாலைகள் பல ஊர்களைச் சுற்றிச் செல்வதாலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல்கள் அதிகமாக இருப்பதாலும் சரக்குப் போக்குவரத்தில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, கோவையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சரக்குகளைக் கொண்டு செல்ல 8 முதல் 10 மணி நேரமும், சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல 7 முதல் 8 மணி நேரமும் ஆகிறது. இதனால் எரிபொருள் செலவு அதிகரிப்பதோடு, ஏற்றுமதிப் பொருட்கள் உரிய நேரத்தில் துறைமுகங்களைச் சென்றடைவதிலும் சிக்கல் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலேயே இந்தப் புதிய தொழில்துறை எக்ஸ்பிரஸ்வே திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, இதன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனை 'டெக்னோ எகனாமிக் ஃபீசிபிலிட்டி ஸ்டடி' என்று அழைப்பார்கள். இந்த எக்ஸ்பிரஸ்வே எந்த வழியாக அமைய வேண்டும், சாலையின் அகலம், திட்ட மதிப்பீடு, நிலம் கையகப்படுத்தும் விவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பதற்குத் தகுதியான ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்யவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கண்காணிப்புப் பொறியாளர் தற்போது டெண்டர் கோரியுள்ளார்.
இந்த டெண்டர் தொடர்பான முழுமையான விவரங்கள் https://tntenders.gov.in என்ற தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் 23.11.2026 நண்பகல் 12.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ஆலோசனை நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 22.12.2026 பிற்பகல் 3.00 மணி கடைசி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடி இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறைவதுடன், சரக்குப் போக்குவரத்து அதிவேகமாக நடைபெறும்.
மேலும், இந்தப் புதிய எக்ஸ்பிரஸ்வே வழித்தடத்தைச் சுற்றிப் புதிய தொழிற்பேட்டைகள், லாஜிஸ்டிக் பூங்காக்கள் மற்றும் கிடங்குகள் அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விரைவாகச் சந்தைகளுக்கும் துறைமுகங்களுக்கும் கொண்டு செல்ல முடியும். சரக்கு வாகனங்களுக்குத் தனி வழித்தடம் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்படுவதால் சாலை விபத்துகள் குறைவதோடு, தமிழகத்தின் சுற்றுலா மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை.