SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Nov 23, 2026, 10:17 IST | Updated: Nov 23, 2026, 10:24 IST
Image Credit: Kerala bird flu
Join

அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்குள் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர சோதனை மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

கேரளாவில் உறுதி செய்யப்பட்ட H5N1 பறவைக் காய்ச்சல்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் H5N1 வகையைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதை, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழக - கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையினர் கடந்த 20.11.2026 முதல் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கோழி மற்றும் முட்டை வாகனங்கள் திருப்பி அனுப்புதல்

பறவைக் காய்ச்சல் கிருமிகள் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, கேரள மாநிலத்தில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழி எச்சங்கள் மற்றும் கோழித் தீவனங்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களும் சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குக் கோழி மற்றும் முட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் காலி வாகனங்களுக்கும் முழுவதுமாகக் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.  

அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிப்பு

கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்கள் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்களும் புளியரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்திச் சோதனையிடப்படுகின்றன. அவ்வாறு வரும் வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கும் வகையில், 'குளோரின் - டை - ஆக்சைடு' என்ற கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள்

இந்த நோய்த் தடுப்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு, பகல் என 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

90 நாட்களுக்குத் தொடரும் கண்காணிப்பு

புளியரை சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையானது தொடர்ந்து 90 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குள் பறவைக் காய்ச்சல் பரவாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோழிப் பண்ணைகளிலும் போதிய விழிப்புணர்வுடனும், உரிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES