மெகா சிட்டியாக மாறும் சென்னை! அடுத்த 20 ஆண்டுகளுக்கான பிரம்மாண்ட திட்டம்
Chennai Mega City Plan : சென்னை சிட்டியை மெகா சிட்டியாக மாற்றுவதற்கான பிளான் ரெடியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்
Chennai Mega City Plan : தமிழகத்தின் தலைநகரான சென்னை, தனது பழைய எல்லைகளைக் கடந்து பிரம்மாண்டமான கிரேட்டர் சென்னையாக உருவெடுக்கத் தயாராகிவிட்டது. 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.
1,189 ச.கி.மீ-ல் இருந்து 5,904 ச.கி.மீ-ஆக பிரம்மாண்ட விரிவாக்கம்
ஏற்கனவே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 2027 முதல் 2046 வரையிலான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே, கடந்த 21.10.2022 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 184-ன் படி, சென்னை பெருநகரப் பகுதியின் எல்லை 1,189 சதுர கிலோமீட்டரிலிருந்து 5,904 சதுர கிலோமீட்டராகப் பல மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தில் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடர்ச்சியான பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, இந்த 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பழைய 1,189 சதுர கிலோமீட்டர் மட்டுமே சிஎம்டிஏ திட்டப் பகுதியாக உள்ளது. மீதமுள்ள பகுதிகளில் சுமார் 1,617 சதுர கிலோமீட்டர் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் உள்ளூர் திட்டக் குழுமங்களின் கீழும், சுமார் 3,098 சதுர கிலோமீட்டர் பரப்பளவு எந்தவொரு திட்டமிடலும் இல்லாத பகுதியாகவும் இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு, போக்குவரத்து, குடியிருப்பு மற்றும் பொருளாதார ரீதியாக சென்னையுடன் பின்னிப் பிணைந்துள்ள இந்த ஒட்டுமொத்த 5,904 சதுர கிலோமீட்டர் பகுதிக்கும் ஒரே சீரான, நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான் அவசியம் என சிஎம்டிஏ பரிந்துரைத்தது.
மேலும் படிக்க | வாகன ஓட்டிகளே அலர்ட்! பாதியளவு ஹெல்மெட் அணிய முற்றிலும் தடை.. மாநில அரசு அதிரடி
ரூ.45.50 கோடி நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்
இந்த மெகா மாஸ்டர் பிளானைத் தயாரிப்பதற்காக சிஎம்டிஏ சார்பில் ரூ.65.48 கோடி நிதி கோரப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, இத்திட்டத்திற்காக ரூ.45.50 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியானது அடுத்த மூன்று நிதியாண்டுகளில் கீழ்க்கண்டவாறு பிரித்து வழங்கப்பட உள்ளது:
2026 - 2027 நிதியாண்டு: ரூ.10 கோடி
2027 - 2028 நிதியாண்டு: ரூ.22 கோடி
2028 - 2029 நிதியாண்டு: ரூ.13.50 கோடி
சர்வதேச ஆலோசகர் தேர்வு மற்றும் 3 உயர்மட்டக் குழுக்கள்
விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரத்தின் எதிர்கால வளர்ச்சியை உலகத்தரம் வாய்ந்த நகரங்களுக்கு இணையாக வடிவமைக்க, சாதாரண நிறுவனங்களைத் தவிர்த்து, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெருநகரத் திட்டமிடல் ஆலோசகரை (Internationally Reputed Metropolitan Planning Consultant) 'குளோபல் காம்படெட்டிவ் பிட்டிங்' எனப்படும் உலகளாவிய போட்டி ஏல முறையில் தேர்வு செய்ய சிஎம்டிஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் கோரும் மற்றும் இறுதி செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாக சிஎம்டிஏ செயல்படும்.
இத்திட்டத்தை மிகத் துல்லியமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த மூன்று முக்கியக் குழுக்களைத் தமிழக அரசு அமைத்துள்ளது:
டெண்டர் பரிசீலனைக் குழு: நிதித் துறை, நகர் ஊரமைப்பு இயக்ககம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம், சிஎம்டிஏ மற்றும் சென்னை ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்களைக் கொண்ட இக்குழு, சர்வதேச நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் டெண்டர்களைப் பரிசீலிக்கும்.
வல்லுநர் ஆய்வுக் குழு: சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் கும்டா, டிடிசிபி, தொழில் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை மற்றும் ஐஐடி/அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச ஆலோசகர் வழங்கும் ஒவ்வொரு வரைவு அறிக்கையையும் இக்குழு ஆய்வு செய்து சரிபார்க்கும்.
உயர்மட்ட வழிகாட்டுதல் குழு: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளரை உறுப்பினர் செயலராகக் கொண்டு இக்குழு செயல்படும். இதில் நிதி, தொழில், சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, நீர்வளம், டிடிசிபி, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கும்டா, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் உட்பட மொத்தம் 19 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இக்குழு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை கூடி திட்டப் பணிகளைக் கண்காணிக்கும். சிஎம்டிஏ இதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும்.
புதிய மாஸ்டர் பிளானில் இடம்பெறும் 11 முக்கிய அம்சங்கள்
வெறும் கட்டிட அனுமதிகளுக்கான திட்டமாக மட்டுமல்லாமல், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 11 முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட உள்ளது. சமச்சீரான இடஞ்சார்ந்த வளர்ச்சி, பிராந்திய இணைப்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து, பொருளாதார மேம்பாடு, வீட்டுவசதி, குடிநீர் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு மற்றும் மீள்தன்மை, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்தல், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் சிட்டி வசதிகள் மற்றும் நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஏற்கனவே சிஎம்டிஏ, கும்டா மற்றும் இதர அரசுத் துறைகள் சேகரித்துள்ள தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த புதிய திட்டம் கட்டமைக்கப்படும். இதன் மூலம் சென்னை மாநகரம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் ஒரே பிரம்மாண்ட மெகா சிட்டியாக உருமாறவுள்ளது
மேலும் படிக்க | ஆதார் இல்லாமலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கலாம்: யாருக்கெல்லாம் இந்த விலக்கு?