தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்: E-Way Bill தேவையில்லை! வணிகவரித்துறையின் விளக்கம்
Tamil Nadu Government : தொழில் முனைவோருக்கு வெளியாகியிருக்கும் குட் நியூஸ் என்னவென்றால் 20 கிலோ மீட்டர் வரை எடை மேடைக்குச் செல்ல E-Way Bill தேவையில்லை என வணிகவரித்துறை அதிரடி விளக்கமளித்துள்ளது.
Tamil Nadu Government : தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில், சரக்கு வாகனத் தணிக்கை மற்றும் 'இ-வே பில்' விதிமுறைகள் குறித்து வணிகவரித்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. முதலமைச்சரின் முகவரித்துறை மனு வாயிலாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலகத்தின் வணிக வரி ஆணையர் சார்பில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநருக்கு விரிவான பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையில், 'Flying Squad' எனப்படும் ரோந்துப் படை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்துப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், தொழில் முனைவோர்கள் உற்பத்தி சார்ந்த பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, ஜிஎஸ்டி பில்களில் சிறு எழுத்துப்பிழை இருந்தால்கூட 100 சதவீதத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராதம் செலுத்தாவிட்டால் பொருட்களுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எடை மேடைக்கு கொண்டு சென்று எடை பார்ப்பதற்குள் ரோந்துப் படையினர் பிடித்து கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறையைத் தடுத்து நிறுத்தி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாருக்கு வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் மு.கார்த்திகா சார்பில் அளிக்கப்பட்டுள்ள விரிவான பதிலில், ரோந்துப் படை நடவடிக்கைகள் 15.02.2026 முதல் தலைமையிடத்திலிருந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத் தணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 129(1)(a) மற்றும் 129(1)(b)-ன் கீழ் தண்டத்தொகை விதிப்பதைத் தலைமையிடம் உறுதி செய்து வருகிறது.
ஆவணங்களில் குறைபாடுகள் இருந்து MOV-01, MOV-02 போன்ற படிவங்கள் வழங்கப்பட்டு வாகனம் நிறுத்தப்படும் நிகழ்வுகள் உடனுக்குடன் தலைமை அலுவலகத்திற்கும் இணை ஆணையர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. ஒருவேளை தவறான முறையில் வாகனம் நிறுத்தப்பட்டால், அவற்றைச் சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வாகனம் நிறுத்தம் செய்யப்பட்டு தண்டத்தொகை விதிக்கப்பட்ட இனங்கள் அனைத்தும் அலுவலகத்தில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், கோவை தொழில் அமைப்பு கூட்டமைப்பு தெரிவித்தது போல் எந்தவொரு இனங்களுக்கும் சிறு எழுத்துப் பிழைகளுக்காக 100 சதவீதத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் வணிகவரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
எடை மேடைக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது, உரிய Delivery Challan அல்லது E-Way Bill ஆகிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, ஜிஎஸ்டி வரிச் சட்ட விதிகள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எடை மேடைக்குப் பொருட்களைக் கொண்டு செல்வது தொடர்பாக முக்கியச் சட்ட விதி ஒன்றையும் வணிகவரித்துறை சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி விதிகள் 2017-ன் விதி 138(14)-ன் துணை விதி (n)-ன் படி, அனுப்புநரின் வணிக இடத்திலிருந்து எடை அளவிடும் நிலையத்திற்கு எடை அளவிடுவதற்காகவோ அல்லது எடை அளவிடும் நிலையத்திலிருந்து மீண்டும் அனுப்புநரின் வணிக இடத்திற்கோ அதிகபட்சம் 20 கிலோமீட்டர் தூரம் வரை சரக்குகளைக் கொண்டு செல்லும்போது, விதி 55-ன் படி வழங்கப்பட்ட சரக்கு வழங்கல் சீட்டுடன் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு மின்வழிச் சீட்டு உருவாக்கத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், 20 கிலோமீட்டர் வரம்பிற்குள் உள்ள எடை மேடைக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது E-Way Bill தேவையில்லை என்ற விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அப்பொருட்களின் நகர்வு உரிய Delivery Challan உடன் மேற்கொள்ளப்படுவது கட்டாயமாகும், அது இல்லாமல் கொண்டு செல்லப்பட்டால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருவேளை அனுப்புநரின் தொழில் நடைபெறும் இடத்திற்கும் எடை மேடைக்கும் இடையிலான தூரம் 20 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் பட்சத்தில், இந்த E-Way Bill விலக்கு பொருந்தாது என்றும், அப்போது E-Way Bill மற்றும் விலைப்பட்டியல் அல்லது Delivery Challan ஆகிய ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக, பொதுவான குறைகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்து, குறிப்பிட்ட இனங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கும் பட்சத்தில், அலுவலக நடைமுறைகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை உறுதியளித்துள்ளது.