2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2,03,521 கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 14.7% அதிகமாகும் என புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகின்றன.
மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய கடைசி மூன்று மாதங்களில் தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் தொடர்ச்சியாக சரிந்து வந்துள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 1% அளவுக்கு சரிந்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 5% அளவுக்கு சரிந்துள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,188 கோடியாகும். 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.10,670 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஆளும் தவெக அரசின் மீது முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக சாடி உள்ளார். தங்கம் தென்னரசின் X பதிவில், "திமுக ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களை விஞ்சி, இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜிஎஸ்டி வசூலில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில் வளர்ச்சியைக் காணும்போது, தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தி முடங்கி, நுகர்வு சுருங்கி வருவது நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம் என்றும் தங்கம் தென்னரசு சாடி உள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களை விஞ்சி, இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜி.எஸ்.டி வசூலில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது.
நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில்… pic.twitter.com/UFN7s68GaK— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) October 1, 2026
தொழில் முதலீடுகளையும் நிதி மேலாண்மையையும் தொலைநோக்குப் பார்வையோடு கையாண்ட திமுக ஆட்சியின் வழிகாட்டுதல் இன்றி, பொருளாதாரத்தை முடக்கியுள்ள இந்த சீர்கேட்டிற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டின் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறைந்திருந்தாலும், தொழில் வளர்ச்சி பெற்ற மற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட ஜிஎஸ்டி வசூல் அதிரித்துள்ளது.
சிக்கிம் மாநில வரி வருவாய் அதிகபட்ச சரிவை சந்தித்துள்ளது. அங்கு -51% அளவுக்கு சரிந்துள்ளது. அதேபோல், ஜம்மு காஷ்மீர் -29%, புதுச்சேரி -31%, உத்தரகாண்ட் -23% என வரி வருவாய் சரிந்துள்ளது.
| மாநிலம் | செப்டம்பர் 2026 வரி வருவாய் |
| மகாராஷ்டிரா | ரூ.29,986 கோடி (+15%) |
| கர்நாடகா | ரூ.13,884 கோடி (+16%) |
| குஜராத் | ரூ.12,222 கோடி (+17) |
| தமிழ்நாடு | ரூ.10,188 கோடி (-5%) |