'கள்ளக்குறிச்சி ஆட்சியரின் துணிச்சலான முடிவு...' கவிதா ராமு IAS பதிவு... 3 மாதங்களாக நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படும் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு ஆதரவளித்து கவிதா ராமு ஐஏஎஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இருப்பினும் அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், கவிதா ராமு பதிவில் குறிப்பிட்ட முக்கிய விவரங்களை இங்கு காணலாம்.
Kallakurichi TVK MLA Harassment Case: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடந்த சில நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. நேற்று முன்தினம் (நவ. 23) பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் புகாரின் அடிப்படையில், பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று (நவ. 24) அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க | அருள் விக்னேஷின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்... என்ன நடக்கும்? MLA பதவி பறிபோகுமா?
கைதாகும் அருள் விக்னேஷ்...?
அதற்கு முன்னதாக, அருள் விக்னேஷ் தனது எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்வார் என்றும் தொடர்ந்து அவரை தவெக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் பிறகே அவர் கைதாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கவிதா ராமு ஐஏஎஸ் போட்ட பதிவு
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட செயலாளருக்கு ஆதரவு தெரிவித்து ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை நேற்றிரவு பதிவிட்டிருந்தார். கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக கவிதா ராமு ஐஏஎஸ் செயலாற்றி வருகிறார். இருப்பினும் குறிப்பிட்ட பதிவு தற்போது அவரது பேஸ்புக் பக்கத்தில் காணவில்லை, அவரை பதிவை நீக்கியிருக்க வாய்ப்புள்ளது.
கவிதா ராமுவின் முழு பதிவு Screen Shot எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் அந்த Screen Shot புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. எனினும், அந்த Screen Shot புகைப்படம் இங்கு இணைக்கப்படவில்லை.
ஆனால், பாதிக்கப்பட்ட அதிகாரி இந்த சம்பவத்தால் அடைந்த மன உளைச்சல், அதைத் தொடர்ந்து அவர் எடுத்து துணிச்சலான முடிவு, சக அதிகாரிகளின் மௌனம் ஆகியவை குறித்து கவிதா ராமு ஐஏஎஸ் அவரது பதிவில் குறிப்பிட்ட விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த மன உளச்சல்
சம்பந்தப்பட்ட அதிகாரி (பாதிக்கப்பட்ட ஆட்சியர்) எழுத்தப்பூர்வமாக தற்போது புகார் அளித்துள்ளதால், இந்த விவகாரம் குறித்த பேசுவதில் தவறும் இல்லை என நான் நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சமூக வலைதளங்களில் சிலர் இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தோன்றிய பல்வேறு கதைகளை திரித்து பரப்பத் தொடங்கியபோது, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரும், அவரது கணவரும் மிகுந்த உளச்சலை சந்தித்ததாக கவிதா ராமு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு முன் நடந்தது
கள்ளக்குறிச்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதியின் (எம்எல்ஏ) தகாத வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மற்றும் நடத்தை தொடர்ந்து இந்த சம்பவம் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பே நடந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் இதுகுறித்த பரபரப்பு ஏற்பபட்ட பிறகே நம்மில் பெரும்பாலானோருக்கு இது தெரியவந்தது என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆட்சியர் கூறியது என்ன?
தனது ஆதரவை தெரிவிப்பதற்காக கடந்த நவம்பர் 11ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருடன் விரிவாக உரையாடியதாக கவிதா குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டதாக கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இத்தகைய சம்பவம் எதுவுமே நடக்காதது போல சில சமூக வலைதளப் பக்கங்கள் இதனைச் சித்தரிக்கும் விதம் குறித்தும் அவர் வேதனை தெரிவித்ததாக கவிதா ராமு குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் துணிச்சலான முடிவு
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், பணியிட மாறுதல் குறித்து எடுத்த முடிவையும் கவிதா ராமு விளக்கியிருந்தார். வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமைச் செயலாளரே கூட முன்பு அவருக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெளிவுப்படுத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் கூறியதாக கவிதா ராமு குறிப்பிட்டுள்ளார். இதை துணிச்சலான முடிவு என்றும் கவிதா ராமு பாராட்டி உள்ளார்.
அதேநேரத்தில் சக அதிகாரிகளாகிய தாங்கள் இதில் ஏன் இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பதையும் கவிதா ராமு அவரது பதவில் விளக்கியிருந்தார்.
சக அதிகாரிகள் மௌனம் காத்தது ஏன்?
பாதிக்கப்பட்ட அதிகாரியின் சம்மதமும் விருப்பமும் இல்லாமல் செயல்படக் கூடாது என்பது முக்கியம் என்பதாலும், அவரது சுயமரியாதைக்கும் விருப்பத்திற்குமே முதலிடம் அளிக்கப்பட வேண்டியிருந்தது என்றும் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எத்தகைய மன வேதனைகளை கடந்து வர வேண்டியிருக்கும் என்பது ஒருவரால் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும் என்றும்; பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் இந்த கடினமான அத்தியாயத்தைக் கடந்து, தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மன அமைதியையும், வலிமையையும் பெறுவார் என்று தான் மனதார நம்புகிறேன் என்றும் பதிவின் இறுதியில் கவிதா ராமு குறிப்பிட்டுள்ளார்.