CM விஜய்க்கு பின்னடைவு... 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு விவரம்
Madras High Court: அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
MHC Verdict On 5 Constituencies By-polls Case: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தமிழ்நாட்டின் 17வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 5 அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இருந்த நிலையில், ராஜினாமா செய்திருந்தாலும் அவர்களின் வெற்றியை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருந்தது.
இதனால், இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு எதிராக தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அது பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். தேர்தல் வழக்கில் வெற்றி பெறுபவரும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவரும் ஒரே தொகுதிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதால் 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து கடந்த ஜூலை 10ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் வாதம் என்ன?
- இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி:
- நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கை முடிக்க கால அவகாசம் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது.
- மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 151 (ஏ) பிரிவு, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்படவில்லை.
- சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.
- தேர்தல் வழக்கில், ஒருவர் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரும் வழக்கு நிலுவையில் இருந்தால், அந்த தொகுதியை காலியானதாக கருத முடியாது.
- நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கை விரைந்து முடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படும்.
- தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.
- மேலும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, ஒரு தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும், இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது.
முதல்வர் தரப்பு முன்வைத்த வாதம்
முதலமைச்சர் விஜய் தரப்பில், "திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து, முதலமைச்சர் ராஜினாமா செய்த பிறகு தாக்கல் செய்யப்பட்டது. அதனால், தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீக்கி, இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (நவ. 27) காலை தீர்ப்பு வழங்கியது.
அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் வழக்குகளின் விசாரணை நிறைவடைந்த பிறகுதான் அதுகுறித்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியவர்கள்
திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளில் முறையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏ ஆன பின்னர் பொறுப்பில் இருந்து விலகினர். தற்போது இவர்கள் தவெகவில் இணைந்துவிட்டனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை தொகுதியில் வென்ற ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதியில் வென்று இசக்கி சுப்பையா ஆகியோரும் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்து, அதிமுகவில் இருந்தும் விலகினர். இவர்களும் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதை போல் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் முறையே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏவாக வென்றனர்.
காலியாக உள்ள 6 தொகுதிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்சமயம் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கொளத்தூர் உள்ள 6 தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு