கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்
மயிலாடுதுறை அருகே பன்னீர்வேலி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அடையாள தெரியாத நபர் மலம் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை போலீசார் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சி பன்னீர்வேலி கிராமத்தில் காளியம்மன் கோவில் எதிர்புறம் மேல்நிலைப்பள்ளி நீர்தேக்க தொட்டி உள்ளது.
1995ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பன்னீர்வேலி கிராமத்தில் உள்ள 200 குடும்பங்களுக்கு தினம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் மலம் கழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலம் கழிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி
ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் செல்போனில் டவர் கிடைக்காததால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி உள்ளார். அப்போது துர்நாற்றம் வீசவே அங்கு பார்த்தபோது மலம் கழிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
அதை புகைப்படம் எடுத்துள்ளார். 15 ஆண்டுகளாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இடிந்து விழுந்து விடும் நிலையில் அபாயகரமாக உள்ள இந்த தொட்டியில் மேலே மூடி வழியாக உள்ளே இறங்குவதற்கான வழி பழுதாகிவிட்டது. தொட்டியின் உள்ளே இறங்குவதற்கான ஏணி இல்லாததால் பல ஆண்டுகளாக குடிநீர் சுத்தம் செய்யப்படவில்லை.
பொதுமக்கள் வைத்த கோரிக்கை
குடிநீரில் மலம் கலந்திருக்கலாம் என்ற பயத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குடிநீரின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதோடு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் புறத்தில் அசுத்தம் செய்த நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, குளம் மற்றும் திடல் உள்ளதால் இளைஞர்கள் பலர் அந்த பகுதிக்குச் சென்று தண்ணியடிப்பது, கஞ்சா அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் எலி போன்றவைகள் உள்ளே விழுவதாகவும் இடிந்து விழும் நிலையில், உள்ள மேல்நிலை நீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுவது என்ன?
முன்னரே இந்த தொட்டியை அகற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரவு வந்தவுடன் தொட்டி அகற்றப்படும் என்று, குடிதண்ணீரை ஆய்வுக்காக எடுத்து அனுப்ப உள்ளதாகவும், மாற்று ஏற்பாடாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை விளக்கம்
இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் நேற்று (நவ. 12) வெளியிட்ட விளக்கத்தில், "மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் பன்னீர்வெளி பகுதியில் அமைந்துள்ள பஞ்சாயத்து குடிநீர் தொட்டியின் மேல்புறத்தில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் மனிதக் கழிவு இன்று (அதாவது நேற்று) காலை காணப்பட்டது. மனிதக் கழிவு குடிநீர் தொட்டியில் இருந்த குடிநீரில் காணப்படவில்லை.
இது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கடந்த நவ. 8ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இரவு பன்னீர்வெளி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் இயற்கை உபாதையை கழிக்கும் அவசரத்தின் காரணத்தால் அந்த குடிநீர் தொட்டியின் மேல், இயற்கை உபாதையை கழித்து உள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் இயற்கை அவசரத்தினால் மட்டுமே நடந்தது எனவும் இச்செயலை செய்வதற்கு அச்சிறுவனுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு இருந்த விவகார்ததில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் விளையாட்டாக செய்திருப்பாக காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள்.. விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்!