ரூ.700 கோடி ஹெராயின்: Vice City ஆகும் தமிழ்நாடு... CM விஜய் வாய் திறப்பாரா? - ஸ்டாலின் அதிரடி
சென்னையில் ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் தமிழ்நாடு Vice City ஆக மாறி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிட்டு தவெக ஆட்சியில் தவெக ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு என முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் போட்ட பதிவில், "கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் தவெக நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நமது மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
மேலும் படிக்க | "ரீல்ஸ் வெளியிடுவதால் போதையை ஒழிக்க முடியாது" - தவெக அரசை விளாசிய டிடிவி தினகரன்
காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை...?
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?" என கேள்வி எழுப்பி உள்ளார். பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? என்றும் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
Vice City ஆக மாறும் தமிழ்நாடு
DRI என்பது மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகும். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination (விருப்பமான இடம்) ஆகிவிட்டது என ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, தவெகவினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என தவெக ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Vice City என்றால் என்ன?
Vice City என்பது உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் வீடியோ கேம் ஆகும். அந்த வீடியோ கேமில் Vice City என்பது கற்பனை நகரமாகும். அமெரிக்காவின் மியாமி, பிளோரிடா நகரங்களை போன்று வடிவமைக்கப்பட்ட கற்பனை நகரமாகும்.
இந்த Vice City கற்பனை நகரத்தில் கடத்தல், வன்முறை நிறைந்து காணப்படும். அதை குறிப்பிட்டே மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். Vice City 6 லேட்டஸ்ட் வீடியோ கேம் நேற்று வெளியாகியிருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு டிஜிபிக்கு கேள்வி
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று (நவ. 18) புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? என்றும்; அனைத்திற்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை வலியுறுத்தி உள்ளார்.
'எப்போது மௌனம் கலைப்பார் CM விஜய்?'
"போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய்யின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?" முதல்வர் விஜய்யின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
தவெக ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள் என்றும்; ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே என்றும் அவர் சாடி உள்ளார்.
சென்னையில் சிக்கிய ஹெராயின்
சென்னை மாதவரத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் ரூ.700 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் கடத்தல் போதைப் பொருளை நேற்று முன்தினம் (நவ. 17) பறிமுதல் செய்துள்ளனர். அந்த போதைப் பொருளை ஐஸ்கிரீம் வண்டியில் மறைத்து வைத்து கடத்தி உள்ளனர்.
DRI குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மாதவரம் அருகே உள்ள ஐஸ்கிரீம் ஆலைக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்ட ஐஸ்கிரீம் வண்டியை சோதனையிட்டபோது, அந்த போதைப்பொருள் சிக்கியிருக்கிறது.
2 பேர் கைது
இதுதொடர்பாக 2 பேரை DRI அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அப்துல் சுக்குர், சஃபிக் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையில் வசித்து வரும் இவர்கள், தென் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் நேற்றிரவு (நவ. 18) ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களால் இந்த சரக்கு மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாக DRI வட்டாரங்களில் தகவல்கள் கூறியுள்ளன. இந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது மற்றும் எங்கு கடத்தப்பட இருந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
மேலும் படிக்க | தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு