SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பருவமழை எதிரொலி: அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Tamil Nadu Education Department : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பிதுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 25, 2026, 09:47 PM IST | Updated: Oct 25, 2026, 09:54 PM IST
Join

Tamil Nadu Education Department : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், ஆங்காங்கே நில அதிர்வுகள் ஏற்படுவதாலும் பள்ளி கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து, மாணவர்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகள் இயக்ககம் ஆகியவை இணைந்து அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கட்டடக் கட்டமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

1. மேற்கூரை மற்றும் மொட்டை மாடி ஆய்வு

பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகளின் உறுதித்தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மொட்டை மாடியில் மழைநீர் வடிகால் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்க அனுமதிக்கக் கூடாது. மேலும், கட்டட மேற்கூரையின் கைப்பிடிச் சுவர்கள், ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு மேல் உள்ள சன்ஷேடுகள் விரிசல் அடைந்துள்ளதா அல்லது பலவீனமாக உள்ளதா என பரிசோதித்து, சேதமடைந்திருந்தால் உடனடியாக பழுதுபார்க்க வேண்டும்.  

2. சுற்றுச்சுவர் மற்றும் சேதமடைந்த வகுப்பறைகள் பாதுகாப்பு

தொடர் மழை காரணமாக சுற்றுச்சுவர்கள் நிலத்தடி நீரினாலும் மழையினாலும் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால், அவற்றை தினசரி கண்காணிக்க வேண்டும். பலவீனமான அல்லது விரிசல் விழுந்த சுற்றுச்சுவர்கள் கண்டறியப்பட்டால், மாணவர்கள் அருகில் செல்லாதவாறு முள்வேலி, தடுப்புகள் (Barricades) அல்லது எச்சரிக்கைப் பலகைகள் அமைத்துப் பாதுகாக்க வேண்டும். அதேபோல், சுவர்கள் அல்லது கூரைகளில் விரிசல் மற்றும் நீர்க்கசிவு உள்ள வகுப்பறைகளில் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது; அத்தகைய அறைகளை உடனடியாகப் பூட்டி சீல் வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த பொறியாளரிடமிருந்து 'பாதுகாப்பானது' என்ற எழுத்துப்பூர்வ சான்றிதழ் பெற்ற பிறகே அவற்றை மீண்டும் திறக்க வேண்டும்.

3. பழைய கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகள்

பள்ளி வளாகத்திற்குள் பயன்பாடின்றி பழுதடைந்துள்ள மற்றும் இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவற்றை விரைந்து இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அக்கட்டடங்களின் 50 அடி சுற்றளவிற்கு மாணவர்கள் நெருங்காதபடி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆழமான குழிகள் மற்றும் வாய்க்கால்களைச் சுற்றி உயரமான தடுப்புகள் (Hard Barricades) அமைக்கப்பட வேண்டும்; சிமெண்ட், செங்கல், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்கக் கூடாது.

4. நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கிணறுகளின் பாதுகாப்பு

பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகள் அனைத்தும் பலமான கான்கிரீட் அல்லது இரும்பு மூடிகள் கொண்டு பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கட்டிடங்களின் மேல் வைக்கப்பட்டுள்ள சிண்டெக்ஸ் அல்லது கான்கிரீட் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் அவற்றின் தாங்குதளங்களின் பலத்தை முறையாக ஆய்வு செய்து விபத்துகள் ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும்.  

அதிகாரிகளுக்கு உத்தரவு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த பாதுகாப்பு நெறிமுறைகள் 100% நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டடப் பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களோ கண்டறியப்பட்டால் எவ்வித தயக்கமும் தாமதமும் இன்றி மாற்று ஏற்பாடுகளைச் செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர்கள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES