பழைய கடனைப் புதுப்பித்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? கூட்டுறவு வங்கியின் புதிய விதிகள் சொல்வது என்ன?
Tamil Nadu gold loan new rules : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவோருக்கான முக்கிய அப்டேட். கிராம் ஒன்றுக்கு ரூ.10,000 வரை கடன் பெறுவதற்கான புதிய விதிமுறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu gold loan new rules : கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் வங்கிகளில் நகைக்கடன் பெறும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் வட்டி விகிதங்களை முறைப்படுத்தி பொதுமக்களுக்குச் சாதகமான புதிய வழிகாட்டுதல்களையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்வு
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கான உச்சவரம்பு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தங்கத்தின் மதிப்பு மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது சந்தை மதிப்பில் 75% வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தில் முக்கிய மாற்றம் மற்றும் சலுகை
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது நேரடிக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக்கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகள் களையப்பட்டுள்ளன:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை விட, PACCS சங்கங்களுக்கு DCCB விதிக்கும் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் லாப வரம்பு 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற எளிய மக்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய கடன்கள் மற்றும் புதுப்பித்தலுக்கும் பொருந்தும்
அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவு மற்றும் சலுகைகள், இனி புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் பெற்று அதனைத் தற்போது புதுப்பிக்கும் நபர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, கூட்டுறவு வங்கிகளை நாடும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.