ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி
TN Omni Bus Fare: தொடர் விடுமுறை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்றும் அதற்கான எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
TN Omni Bus Fare: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களுடன், அக்டோபர் 19ஆம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜை, அக்டோபர் 19ஆம் தேதி விஜயதசமி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதலே பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், தொடர் விடுமுறையொட்டி, சிறப்பு ரயில்கள், பேருந்துகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆனால், ஆம்னி பேருந்துகளில் தொடர் விடுமுறையொட்டி, கட்டணம் என்பது பல மடங்கு உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.3000 வரை உயர்ந்துள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தமிழக போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து, 15.10.2026 வியாழக்கிழமையிலிருந்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவிர தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்கக் கட்டணம் ரூ.14,38,200 நிர்ணயிக்கப்பட்டும், மற்றும் இணக்கக்கட்டணம் (Spot Fine) ரூ.3,83,500 வசூலிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்து தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.54,78,073 வசூலிக்கப்பட்டது. மேற்கண்ட தணிக்கையில் கடந்த இரண்டு தினங்களில் அதிகக் கட்டணம் (Excess Fare) வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 6 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும். விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
புகார் அளிக்க சிறப்பு எண்
இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது
- புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் 18004256151
- புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து மீது போக்குவரத்து துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் குழுக்கள் அமைத்து தொடர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ சலான்கள் வழங்கப்பட்டது.
அதிகக் கட்டணம் வசூலித்த மற்றும் பிற குற்றங்களுக்காக 7 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு