ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு உதவும் நோக்கில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI – Top class education in schools for OBC, EBC DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026–27-ஆம் ஆண்டிற்கு, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாட்டு கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ, மாணவியர் இத்திட்டத்தின் கீழ் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு ரூ.75,000 வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் மத்திய அரசால் உதவித்தொகை வழங்கப்படும். இதில் மாணவிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் OBC, EBC அல்லது DNT பிரிவைச் சார்ந்தவராகவும், குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், 2025–26-ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவர்கள், நடப்பாண்டில் (2026–27) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குரிய விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) உறுதிசெய்து, புதுப்பித்தல் (Renewal) படிவத்தை பூர்த்தி செய்து வரும் 31.10.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட இவ்விண்ணப்பங்களைத் தத்தம் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் 15.11.2026 ஆகும்.
2026–27 ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பத் தேதி NSP இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை (https://socialjustice.gov.in) பார்வையிடலாம். தகுதியான பள்ளி மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.