கிராமத்தையே ஆக்கிரமித்த தனி ஆள்... அதிகாரிகள் இருக்கிறார்களா? இல்லையா? - நீதிமன்றம் காட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் லட்சுமணன் குடியிருப்பு என்ற சிறிய கிராமத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வழக்கு தொடுத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில் வருவாய்த்துறையினர் வட்டாட்சியர் இருக்கிறார்களா? இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உரப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பரமக்குடி தாலுகா, உரப்புளி பகுதியில் லெட்சுமணன் குடியிருப்பு என்ற சிறிய கிராமம் வைகை ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது என்றும் இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமத்தையே ஆக்கிரமித்த தனிநபர்
இந்தச் சூழலில், லெட்சுமணன் குடியிருப்பு என்ற அந்த கிராமத்தில் தினகரன் என்ற தனி நபர் சட்டவிரோதமாக தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சர்க்கார் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு மற்றும் கிராம நத்தம் நிலத்தில் கிராமத்தின் பாதி நிலத்தை தனது பெயரிலும், தனது குடும்பத்தார்கள் பெயரிலும் பட்டாவாக மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்மூலம், மொத்த கிராமத்தையும் தினகரன் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறார் என்றும் இதேபோல் இங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளி நிலங்களையும் தனது பெயருக்கு மாற்றி விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
500 குடும்பங்களுக்கு பாதிப்பு
இதனால் லெட்சுமண குடியிருப்பு கிராம மக்கள் அடிப்படை வசதிகள், குடிநீர் குழாய் பதிப்பது, பொது பாதையில் செல்வது, அவசர நிலையில் ஆம்புலன்ஸ் வருவது உள்ளிட்டவை கூட சிரமமாகி உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமின்றி அனைத்து இடங்களையும் கம்பி வேலி போட்டு மூடிவிட்டார் என்றும் அதனால் 500 குடும்பங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்பு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மொத்த கிராமத்தையும் தனது கண்காணிப்பில் வைத்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர் வைத்த கோரிக்கை
இதனால், கிராம பெண்கள் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அரசு நிலங்களை போலியாக பட்டா தயாரித்து தனது சொந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தினகரன் என்ற அந்த தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
புகைப்பட ஆவணங்கள் தாக்கல்
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று (நவ. 21) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் ஆஜராகி வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில், "அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சியின் உடன் இணைந்து கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து வருகிறார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த புகைப்பட ஆவணங்கள் தாக்கல் செய்தார்" என வாதிடப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் வருவாய் துறையினர் வட்டாட்சியர் இருக்கிறார்களா இல்லையா...? என்றும்; தனிநபர் ஒருவர் எப்படி இவ்வளவு நிலங்களை ஆக்கிரமிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் இந்த மனு குறித்து உரிய விசாரணை செய்து அதன் நிலை அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். தனி நபர் ஒருவர் கிராமத்தையே ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை பெரும் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மேலும் படிக்க | சர்க்கரை பதுக்கினால் இனி அதிரடி ரெய்டு: 15 நாட்களுக்கு மேல் இருப்பில் வைக்கத் தடை