School, Colleges Leave Due to Heavy Rain: வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கும், புதுச்சேரி பகுதிக்கும் இன்று காலை 10 மணிவரை மிக கனமழை அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் அரியலூர், கோவை, தர்மபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கும், காரைக்கால் பகுதிக்கும் இன்று காலை 10 மணிவரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை தொடர்வதால் மாணவ-மாணவியரின் நலன் கருதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். நேற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் இன்று காலை போட்ட பதிவில், "குமரிக் கடல் தாழ்வு அழுத்தப் பகுதி நன்கு வலுப்பெற்று ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுகிறது. கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் மற்றொரு தாழ்வழுத்தப் பகுதி உருவாகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் கட்டத்திற்குள் நுழைய உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
"குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஒரு தாழ்வழுத்தப் பகுதி வலுவாக வலுப்பெற்று வருகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் நன்கு வலுப்பெற்று தாழ்வழுத்தப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இன்று கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதியில் மற்றொரு தாழ்வழுத்தப் பகுதி உருவாகி வருகிறது" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் ஏனெனில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் கட்டத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.