தமிழக அரசுக்கு பின்னடைவு.. காவிரி நீர் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -காரணம் இதுதான்
Cauvery Row News Tamil: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியதாகக் கூறப்படும் 11 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வறட்சி நிலை மற்றும் மழைப்பற்றாக்குறையை கர்நாடகா சுட்டிக்காட்டிய நிலையில், காவிரி மேலாண்மை அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என கர்நாடகா தரப்பு வாதிட்டது.
Cauvery Row News Tamil: தமிழகத்தின் விவசாய எதிர்காலத்துடன் நேரடியாக தொடர்புடைய காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிர்ச்சியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியதாகக் கூறப்படும் 11 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கவலை அதிகரித்துள்ளது.
காவிரி நீர் கோரிய தமிழக மனு தள்ளுபடி
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அதே விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு புதிய மனுவும் ஏற்கப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
விசாரணையின்போது, தமிழக அரசு மீண்டும் புதிய மனு தாக்கல் செய்திருப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனால் தமிழகத்தின் கோரிக்கைக்கு நீதிமன்றம் உடனடி நிவாரணம் வழங்க மறுத்துள்ளது.
"11 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது" - தமிழ்நாடு வாதம்
தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் டெல்டா பகுதிகளில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக விடுவிக்கவில்லை என்றும், ஜூலை மாதம் முதல் சுமார் 11 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் இருப்பதாகவும் அவர் வாதிட்டார்.
இந்த நீர் உடனடியாக வழங்கப்படாவிட்டால், விவசாயிகள் மற்றும் பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், கர்நாடகா தினமும் கூடுதலாக ஒரு டிஎம்சி அளவுக்கு நீரை திறந்து விட வேண்டும் என்றும் தமிழகம் கோரிக்கை வைத்தது.
மேலும் படிக்க - "ரீல்ஸ் வெளியிடுவதால் போதையை ஒழிக்க முடியாது" - தவெக அரசை விளாசிய டிடிவி தினகரன்
காவிரி மேலாண்மை ஆணையம் மீது தமிழகம் அதிருப்தி
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நீர் பகிர்வு தொடர்பாக உத்தரவு பிறப்பித்து வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நீரை விடுவிக்க கர்நாடகாவிற்கு எந்தவித கட்டாய உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது. இதனால் தான் மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழகம் தெரிவித்தது.
வறட்சி நிலையை சுட்டிக்காட்டிய கர்நாடகா
கர்நாடகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷ்யாம் திவான், மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார். இதனால் பாசனத்திற்கான நீர் ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழையால் பயனடைய வாய்ப்புள்ள நிலையில், கர்நாடகாவிற்கு அந்த வாய்ப்பு கிடையாது என்றும் குறிப்பிட்டார். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை குழு தொடர்ந்து நீர் பகிர்வு குறித்து முடிவெடுத்து வருவதால், நீதிமன்றம் இதில் தலையிட தேவையில்லை என்றும் கர்நாடகா தரப்பு வலியுறுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் கவலை
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் செய்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விளைச்சல் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்ந்து அரசியல் மற்றும் சட்டரீதியான முக்கிய பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.