திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: நவ. 24 தீபம் ஏற்ற அனுமதி... உச்ச நீதிமன்றம் உத்தரவு
வரும் நவ. 24ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று ஒரு முறை மட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனை உடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thiruparankundram Deepa Thoon Case: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்திருந்தது. வழக்கமாக ஏற்றும் இடத்துடன் சேர்த்து, அந்த தூணிலும் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததது. இந்த வழக்கின் விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு, இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் கூடுதலாக ஆவணங்கள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஆறு வாரக் காலம் அவகாசம் வழங்கியது. இந்த விவகாரத்தில் நிறைய கேள்விகள் எங்கள் முன்பு எழுப்பப்பட்டு அது குறித்து நாங்கள் விரிவான விசாரணையை நடத்தினோம் என நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி திருப்பரங்குன்ற தூணில் தீபம் ஏற்றலாம் என்று பிறப்பித்த உத்தரவையும், ஜனவரி மாதம் ஆறாம் தேதி இரண்டு நீதிபதிகள் அமர்வு அதை உறுதி செய்து பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மலைக்கோவிலில் மங்கள நிகழ்வு.. திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழா
அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி
கோஷங்களை எழுப்புவது கும்பல் கூடுவது போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது என்றும் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தீபம் ஏற்ற தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது, பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு வழங்கவும், தேவைப்படும்பட்சத்தில் CISF படையை நிறுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.