Tamil Nadu Prisoners Escape: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு என்பது பெரும் பிரச்னையாக நாள்தோறும் வெடித்து வருகிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கில் கோட்டை விட்டுவிட்டாரா என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கொலை, சிறுமிகள் மாயம் என தொடர்ந்து தமிழகம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், சிறைத்துறையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டு வகையில் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, தேனி சிறையில் இன்று 17 கைதிகள் தப்பிய சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.
தேனி சிறையில் இருந்து தப்பியோடிய 17 கைதிகளில், இதுவரை 13 கைதிகளை காவல்துறை பிடித்துள்ளது. மீதம் இருப்பவர்கள் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு தவெக அரசை எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர். குறிப்பாக, தவெக ஆட்சி அமைந்த 5 மாதங்களில் 50 கைதிகள் தப்பியோடியதாக திமுக சட்டத் துறை இணைச் செயலர் பரந்தாமன் கூறியுள்ளார். சிறை காவலர்களை தாக்கிவிட்டு, கைதிகள் தப்பியது இதுவே முதல்முறையும் என அவர் குறிப்பிட்டார்.
சேலம் - சேலம் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி மே 10ஆம் தேதி தப்பினார். தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது ஹுசைன் (36) தப்பியோடினார். இவர் மீது திருட்டு, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. கழிவறையின் இரும்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு கைதி தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
சென்னை - அக்டோபர் 22ஆம் தேதி புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பினர். விசாரணைக் கைதியாக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த சுஜித் புகாரி (21), போக்சோ வழக்கில் தண்டனையில் இருந்த சுரேஷ் என்பவரும் தப்பினர்.
தேனி - அக்டோபர் 27ஆம் தேதியான இன்று தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்றனர். கைதி ஒருவர் வலி ஏற்பட்டது போல் நடிக்க, இதனை சோதிக்க வந்த காவலரை தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பினர். பின்னர் அவர்கள் பிரதான வாயிலில் இருந்த காவலர்களிடமிருந்து சாவிகளைப் பறித்து, நுழைவாயிலைத் திறந்து தப்பிச் சென்றனர்.
செங்கல்பட்டு - ஜூன் 22ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓடினர். பணியில் இருந்த காவலாளி பிரதான வாயிலைப் பூட்டிவிட்டு, சாவியை அருகிலுள்ள காவலாளி அறையில் வைத்திருந்தார். அந்த ஐந்து சிறுவர்களும் இதை முன்னரே கவனித்திருந்த நிலையில், காவலர்களை ஏமாற்றி சாவியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
செங்கல்பட்டு - ஜூலை 13ஆம் தேதி செங்கல்பட்டு ஆத்தூரில் அரசு பாதுகாப்பு மையத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பினர். கலவரம் மற்றும் அரசு சொத்துகளை சேதப்படுத்தியதற்காக இந்த சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த மையத்தில் வார இறுதியில் திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தபோது, பிரதான வாயிலை திறந்து தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் நுழைவு வாயிலில் எந்த பாதுகாப்பு பணியில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை - ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள சிறார் சீர்த்திருத்த நிலையத்தில் இருந்து 11 சிறார்கள் தப்பினர். இரவு நேரத்தில் இல்லத்தின் நுழைவு வாயிலில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தாக்கிவிட்டு, கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தப்பினர். இவர்கள் மீது கொள்ளை, கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளட்ட வழக்குகள் உள்ளன.
நெல்லை - ஜூலை 30ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் 3 பேர் தப்பினர். ஜூலை 27ஆம் தேதி முதல் அடுத்தடுத்து 3 கைதிகள் தப்பியது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி - புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்ற போக்சோ வழக்கு கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தப்பிச் சென்றார். இந்த சம்பவம் அக்டோபர் 8ஆம் தேதி அரங்கேறி உள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில், கழிவறை செல்வதாக காவலரிடம் கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இப்படியாக கடந்த 5 மாதங்களில் 50 கைதிகள் தப்பிச் சென்றது தமிழக சிறைத்துறையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு முறைகளின் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள், உயரமான கூண்டு சுவர்கள், மின்சார வலி அமைப்புகள் இருந்தபோதிலும் கைதிகள் மிக எளிதாக சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டுத் தப்புவதும், சிறை நிர்வாகத்தின் மெத்தன போக்கேயே சுட்டிக்காட்டுகின்றன என பொதுமக்கள் கூறுகின்றன.
சிறைக் கைதிகள் அடுத்தடுத்து இப்படியாக தப்பிப்பது, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பை மறுஆய்வு செய்வதும், தப்பியோடிய கைதிகளை பிடிப்பதும் அவசர தேவையாக உள்ளது. முன்னாள் அமைச்சர்களை கைது செய்வதில் முதல்வர் விஜய்க்கு இருக்கும் ஆர்வம், சிறைத்துறை, கைதிகள் விவாகரத்திலும் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும், மேடைக்கு மேடை பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேசி வரும் அவர், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு கடைசியாகக் கண்ட மிகப்பெரிய சிறைத் துறை சட்டம் ஒழுங்கு என்பது 1999-ல் நடைபெற்ற சென்னை மத்திய சிறைக் கலவரம் தான். சிறையில் இருந்த பாக்சர் வடிவேலு என்ற ரவுடி உயிரிழந்த செய்தி கேட்டு கைதிகள் அரங்கேறிய மிகப்பெரிய கலவரத்தில் துணை ஜெயிலர் உயிரோடு எரிக்கப்பட்டதோடு, 9 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைத் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்த சம்பவம்.
மேலும், 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுதந்திர தினத்தன்று வேலூர் கோட்டை சிறையில் இருந்து 43 கைதிகள் 153 அடி நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி தப்பிச் சென்றனர். அதில் 21 பேர் மட்டுமே பிடிபட்டனர். கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு தவெக ஆட்சியில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.