ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை முக்கிய எச்சரிக்கை
Tamil Nadu Food Safety Department : உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் நவம்பர் 30 வரை அதிரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tamil Nadu Food Safety Department : அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விதமான உணவு வணிக நிறுவனங்களிலும் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், வரும் நவம்பர் 30 வரை மூன்று மாதங்களுக்குத் தீவிர சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கான உதவித்தொகை அப்டேட்! இறுதி வாய்ப்பு
எந்தெந்த நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்?
மாவட்டத்தில் இயங்கும் உணவகங்கள், உணவுக் கூடங்கள், விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறை மற்றும் மருத்துவமனை சார்ந்த உணவகங்கள், சுபகாரிய சமையல் அமைப்பாளர்கள், தெருவோர உணவு வியாபாரிகள், தேநீர் கடைகள் மற்றும் சிறிய தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான உணவு வணிக நிறுவனங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
FSSAI உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் கட்டாயம்
அனைத்து உணவு வணிக நிறுவனங்களும் செல்லுபடியாகும் FSSAI (உணவுப் பாதுகாப்புத் துறை) உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்று வைத்திருக்க வேண்டும். உரிய உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கும் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 63-ன் (Sec 63) கீழ் கடுமையான சட்ட நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும். உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வுக்கு வரும் போது, நிறுவனங்கள் தங்களது சுய தணிக்கை அறிக்கையைக் காண்பிக்க வேண்டும்.
சமையலறை பராமரிப்பு மற்றும் மருத்துவத் தகுதி
உணவு தயாரிக்கும் இடங்கள் மற்றும் சமையலறைகள், உணவு சேமிப்புப் பகுதிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மேசைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் ஆகியவை எப்போதும் தூய்மையாகவும், எண்ணெய் பிசுக்கின்றியும் பராமரிக்கப்பட வேண்டும். பூச்சி மற்றும் எலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாகக் கையாளப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உணவு கையாளும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை நடத்தும் 'Fostac' சிறப்புப் பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியமாகும். பணியாளர்கள் பணியின் போது தலைக்கவசம், கையுறை, முகக்கவசம் மற்றும் சுத்தமான ஏப்ரன் அணிந்து பணியாற்ற வேண்டும்.
எண்ணெய் பயன்பாடு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள்
சமையலுக்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை 'RUCO' முகவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். செயற்கை நிறமிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தித் தாள்கள் போன்ற மையிட்ட காகிதங்களை உணவுப் பொருட்களைப் பொட்டலமிடவோ அல்லது உணவை வைக்கவோ பயன்படுத்தக் கூடாது. சமையலறையில் தூய்மையான மற்றும் குடிப்பதற்கு உகந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | படித்த பெண்களே! சொந்த தொழில் தொடங்க ஆசையா? அரசின் 5 முக்கிய திட்டங்கள்
விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் போது விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு முதலில் மேம்பாட்டு அறிவிப்பு வழங்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் FSSAI உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
மத்திய அரசின் FSSAI உரிமம் பெற்று இயங்கும் பெரிய உணவு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளால் முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.