Tamil Nadu Government Schemes: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில் தொடங்குவதற்கான மானியங்கள், இலவச மின் இணைப்புக்கான கட்டமைப்பு, நிலம் வாங்கும் திட்டம், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயில்வதற்கான கல்விக் கடன் மற்றும் தூய்மைப் பணியாளர் நல வாரிய உதவிகள் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின் தகுதிகள், மானிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.
முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதிகள்: விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் (SC) அல்லது பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மானியம் மற்றும் சலுகைகள்: திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் மூலதன மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் வரை மானியம் (எது குறைவோ அது) வழங்கப்படும். அத்துடன் 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் உதவுகிறது. விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 ஆண்டுகள். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானியம் மற்றும் நிபந்தனை: திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் பயனாளி பெயரிலேயே பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களாகவும், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மானியம்: நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
நிலத்தை விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வாங்கலாம். முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. வாங்கப்பட்ட நிலத்தை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.
பழங்குடியின விவசாயிகளின் பாசன வசதிக்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம். நிலம் விண்ணப்பதாரரின் சொந்த பெயரில் இருக்க வேண்டும். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
மானியம் மற்றும் பங்களிப்பு விவரம் (90% அரசு மானியம் / 10% பயனாளி பங்கு):
5 HP: அரசு மானியம் ரூ.2,25,000; பயனாளி பங்கு ரூ.25,000 (மொத்தம்: ரூ.2,50,000).
7.5 HP: அரசு மானியம் ரூ.2,47,500; பயனாளி பங்கு ரூ.27,500 (மொத்தம்: ரூ.2,75,000).
10 HP: அரசு மானியம் ரூ.2,70,000; பயனாளி பங்கு ரூ.30,000 (மொத்தம்: ரூ.3,00,000).
15 HP: அரசு மானியம் ரூ.3,60,000; பயனாளி பங்கு ரூ.40,000 (மொத்தம்: ரூ.4,00,000).
தொழில்முறை மற்றும் தொழில்நுட்பக் படிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படிக்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
கடன் வரம்பு:
ஆதிதிராவிடர் மாணவர்கள்: உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் படிப்புகளுக்கு ரூ.40 லட்சம் வரை.
பழங்குடியின மாணவர்கள்: உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் படிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரை.
தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள்: உள்நாட்டுப் படிப்புக்கு ரூ.10 லட்சம் வரை; வெளிநாட்டுப் படிப்புக்கு ரூ.20 லட்சம் வரை.
வருமான வரம்பு: SC மாணவர்களுக்கு ரூ.5 லட்சம், ST மாணவர்களுக்கு ரூ.3 லட்சம், தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.4.50 லட்சம்.
வட்டி விகிதம்:
SC மாணவர்களுக்கு 6.5%.
ST மாணவர்களுக்கு 6%.
தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள்: உள்நாட்டுப் படிப்புக்கு 6% (மாணவிகளுக்கு 5.5%), வெளிநாட்டுப் படிப்புக்கு 7% (மாணவிகளுக்கு 6.5%).
திருப்பிச் செலுத்தும் முறை: கடன் வழங்கப்பட்ட மாதத்தில் இருந்தே மாதாந்திர வட்டியைச் செலுத்த வேண்டும். படிப்பு முடிந்த பின் அசல் மற்றும் வட்டித் தொகையை 5 ஆண்டுகள் அல்லது 60 தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் வழியாக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் முக்கிய நலத்திட்ட உதவிகள்:
விபத்து காப்பீடு: விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு ரூ.10 லட்சம்; கை, கால், கண் உறுப்பிழப்புக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை.
இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு: இயற்கை மரணத்திற்கு ரூ.20,000 மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000.
10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000; 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியருக்கு ரூ.1,000.
11-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000.
12-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,500; 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியருக்கு ரூ.1,500.
இளங்கலை பட்டப்படிப்பு: தங்கிப் படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.1,750; பிறருக்கு ரூ.1,500.
முதுகலை பட்டப்படிப்பு: தங்கிப் படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.5,000; பிறருக்கு ரூ.4,000.
தொழில்முறை பட்டப்படிப்பு: தங்கிப் படிப்போருக்கு ரூ.6,000; பிறருக்கு ரூ.4,000.
தொழில்முறை முதுகலை படிப்பு: தங்கிப் படிப்போருக்கு ரூ.8,000; பிறருக்கு ரூ.6,000.
ஐடிஐ / பாலிடெக்னிக்: தங்கிப் படிப்போருக்கு ரூ.1,200; பிறருக்கு ரூ.1,000.
பிற உதவிகள்: திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000; மகப்பேறு உதவித்தொகை மாதம் ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.6,000 (கருச்சிதைவுக்கு ரூ.3,000); கண் கண்ணாடி வாங்க ரூ.500 வரை மற்றும் முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் : தேவையான ஆவணங்கள்: சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், அடையாள அட்டை, குடும்ப அட்டை, திட்ட அறிக்கை (Project Report) மற்றும் விலைப்புள்ளி (Quotation).
விண்ணப்பிக்கும் இணையதளங்கள்: பொதுவான திட்டங்களுக்கு: [https://newscheme.tahdco.com](https://newscheme.tahdco.com). கல்விக் கடனுக்கு: [https://tel.tahdco.com/](https://tel.tahdco.com/). தொடர்புக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது தாட்கோ தலைமை அலுவலகம் (எண்: 31, செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018; தொலைபேசி: +91 44 2431 0221; மின்னஞ்சல்: tahdcoheadoffice@gmail.com; இணையதளம்: www.tahdco.com).