Tamil Nadu government school scholarship : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் சர்வதேச கல்விக் கனவை நனவாக்கும் வகையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளது. "அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயில நிதியுதவி வழங்கும் திட்டம்" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 2026-2027-ஆம் கல்வியாண்டில் வெளிநாடுகளில் மேற்படிப்பு பயிலத் தகுதியான மாணவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 50 தகுதியான அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பொறியியல் பிரிவில் பயில 25 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். கலை, அறிவியல் மற்றும் மனிதவியல் பிரிவுகளில் பயில 25 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் திட்ட வழிகாட்டுதல்களின்படி ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.36.00 லட்சம் வரை தமிழக அரசு முழு நிதியுதவி வழங்கும்.
இத்திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்:
1. பள்ளிப் படிப்புத் தகுதி: விண்ணப்பதாரர் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்றிருக்க வேண்டும்; அல்லது 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று, பின்னர் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டயப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. பல்கலைக்கழகச் சேர்க்கை தகுதி: அண்மையில் வெளியிடப்பட்ட QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பொறியியல், கலை, அறிவியல் அல்லது மனிதவியல் துறைகளில் வழங்கப்படும் முழுநேர வளாக முதுநிலைப் பட்டப்படிப்பில் நிபந்தனையற்ற சேர்க்கை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்: விண்ணப்பதாரர் தகுதிபெறும் இளங்கலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரநிலையைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
குடும்ப வருமான வரம்பு: மாணவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் அனைத்து வழிகளிலிருந்தும் சேர்த்து ரூ.8.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.08.2026 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் [https://forms.gle/MABNLgy21rfcNC1bA](https://forms.gle/MABNLgy21rfcNC1bA) என்ற Google Form இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் சமர்ப்பித்த பின்னர், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, உரிய ஆவண நகல்களுடன் அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 02.11.2026
ஆன்லைன் பதிவு நிறைவடையும் நாள்: 31.12.2026
விண்ணப்ப அச்சுப் பிரதியைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 31.12.2026
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை, தபால் உறையின் மீது "Application for PG Abroad" எனக் குறிப்பிட்டு பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 53, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை - 600025. மின்னஞ்சல்: adpdote@tndote.com
இத்திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள், இணைப்புப் படிவங்கள் மற்றும் பிற தகவல்களை dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில விரும்பும் அரசுப் பள்ளி பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.