ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செக் வைத்த தமிழக அரசு, புகார் எண்கள் அறிவிப்பு
Tamil Nadu Government: விடுமுறை தினங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகமான கட்டணங்களை வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. விடுமுறை தினங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகமான கட்டணங்களை வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
புகார் எண்கள் அறிவிப்பு
தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகார் தெரிவிக்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் அல்லது பிற புகார்களுக்கு பயணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு அல்லது குறுஞ்செய்தி மூலமாக புகார் அளிக்கலாம். மின்னஞ்சல் மூலமாகவும் புகாரை தெரிவிக்கலாம்.
மேலும் இந்த விவகாரம் குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (02.10.2026 முதல் 21.10.2026 வரை) பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக புகார் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழக சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் மற்றும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் தொலைபேசி எண் வாயிலாக தொலைப்பேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.
புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9384808333 / 1800 425 6151
புகார் அளிக்க மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: tc.tn@nic.in”
மேலும் படிக்க | Tamil News LIVE: கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம்; CM விஜய் ரோடு ஷோ
இந்த செய்திக்குறிப்பின் படி, வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தீவிர சோதனைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல்... 3 மாதங்களாக தொடர் சரிவு - கடுமையாக சாடும் திமுக